பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

87

களில், ஈடுபட்டிருந்த தங்களது பணியாளர்களை அன்றைய இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மனம் வெதும்பி மன்றத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றை கி.பி. 1784-ல் நிறைவேற்றி கண்டனம் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதி, கும்பெனியாரது நடவடிக்கைகள் முழுவதும், ஊழல் நிறைந்ததாகவும், எந்தக் குறிக்கோள்களுக்காக அந்த நிறுவனம் அமைக்கப்பட்டதோ அதற்குப் புறம்பானதாகவும் உள்ளன. போர்க்காலத்திற்கும் அமைதி காலத்திற்குமாக கும்பெனியாருக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகள் மீறப்பட்டு எல்லா நிலைகளிலும் வெறுப்பைத் தூண்டக்கூடியதாக இருக்கின்றன. அவர்கள் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைகள் பொது மக்களது நம்பிக்கையை இழக்கச் செய்வதற்குக் காரணமாகவும், செல்வவள மிக்க நாடுகளை அழிவிற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி நமது வலிமைக்கும், தேசிய கவுரவத்திற்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளன...' எனத் தொடர்கிறது. பின்னர், அதே பாராளுமன்றத்தில் பேசிய சர். ஜார்ஜ் கான்வெல் பிரபு என்பவர், உலகத்தின் எந்த மூலையிலும் இத்தகைய லஞ்ச லாவண்யமும், பேராசையும், துரோகமும் நிறைந்த அமைப்பு அப்பொழுது இருந்தது கிடையாதென ஆங்கிலக் கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு 'பாராட்டுக்கள்' வழங்கினார்.[1]


இத்தகைய சாடுதல்களின் பிரதிபலிப்பாக 'இந்தியச் சட்டம்' என்ற பெயரில் ஒரு புதிய ஆணையை இங்கிலாந்து பாராளுமன்றம் கி.பி. 1784-ல் நிறைவேற்றியது. ஆனால் 1786 ஜூலை மாதத்தில் நடைபெற்ற கும்பெனி இயக்குனர்களது இரகசியக் கூட்டம், கும்பெனியின் கவர்னர் ஜெனரலை இந்தச் சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தியது. ஏனெனில் அவர்களது வியாபார நோக்கம் இங்குள்ள செல்வங்களை தங்கள் நாட்டிற்கு வாரிச்செல்வது என்பது, ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு அளித்த அதிகார வரம்பைக் கொண்டு தங்களது ஆதிக்க வெறியினை நிறைவு செய்து கொண்டனர். மேலும் அவர்களது வியாபாரத்தில் இன்னொரு ரகசியமும் இருந்தது. பொதுவாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் வியாபாரம் செய்பவர்கள், தங்கள் நாட்டுப் பொருள்


  1. Palmi Dutt., R., India Today (1947), p. 89