பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90
எஸ். எம். கமால்
 

களுக்கு முன்னர் அதே கட்டடங்களின் ஒன்றில் தான் அரசியல் கைதியாக தமது தாயாருடனும் தமக்கைகளுடனும் பத்து ஆண்டுகளை அங்கு கழித்த சிறை வாழ்க்கை அவரது சிந்தனையில் நிழலாடியது. அந்த இல்லத்திலேயே தனது அருமைத் தாயார் நாட்டை இழந்த கவலையினால் நோயுற்று இறந்ததும் அவரது எண்ணத்திரையில் எழுந்து மறைந்தது. அந்தக் கசப்பான நினைவுகள்-இனந்தெரியாத கிளர்ச்சிகளை அவரது இதயத்தில் உருவாக்கின. சற்று உறுதியான குரலில் அவரையும் அறியாது சில வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளிப்பட்டன. அவரது குதிரையை ஒட்டி வந்து கொண்டிருந்த இன்னொரு குதிரையிலுள்ள அவரது அந்தரங்கப் பணியாளர் இராமசாமி சேர்வைக்காரர் 'மகாராஜா' என்று பணிந்த குரலில் கேட்ட பொழுதுதான். அவருக்கு சுய நினைவு வந்தது. அப்பொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடத்தின் அருகில் தமது குதிரையை நிறுத்தி தளபதி பிலாய்டு கீழே இறங்கியதுடன் மன்னரையும் இறங்கி வருமாறு அழைத்தார். அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் சென்றனர். அன்று முதல் அந்த இடம் மன்னரது தனிமை வாழ்க்கைக்கு உரிய வீடாக அமைந்தது.

O O O

நாட்கள் பலவாகி விட்டன. இராமநாதபுரம் அரண்மனை வாழ்க்கை ஒரு பிரமை போல மன்னருக்குத் தோன்றியது. காலையில் இராஜ ராஜேசுவரி அம்மன் கோவில், திருப்புல்லாணி பெருமாள் கோவில், முத்துராமலிங்கசுவாமி கோவில் ஆகிய ஆலயங்களின் பிரசாதங்களுடன் ஆஜராகி ஆசீர்வதிக்கும் அத்தியானப் பட்டர்கள், மங்களகரமான காலைப் பொழுதை நினைவூட்ட கருங்குரங்கு, கண்ணாடி, யானை, ஒட்டகை ஆகியவைகளை கொண்டு வந்து நிறுத்தி, வணங்கி, அன்பளிப்புப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், பண்டைய மன்னர்களது வாழ்க்கை நியதிகளை விளக்கும் புலவர்கள், விருந்தாளிகளின் வருகையைத் தெரிவிக்கும் கட்டியக்காரர்கள், துபாஷ், வக்கீல், பிரதானி, அரண்மனைக் கணக்கு உரையாடும் பொழுது காளாஞ்சி ஏந்தி நிற்கும் அடைப்பக்காரர்கள், கவரி வீசுபவர்கள், பணிக்கம் தாங்கும் பணியாளர்கள், எடுபிடி வேலைக்காரர். நேரத்தை நினைவூட்டும் நகரா அடிப்பவர்கள், சொல்லுகின்ற கட்டளைகளை பதிவு செய்யும் பாரசீக, ஆங்கில, தமிழ் எழுத்தர்கள், அஞ்சல்காரர்கள், பட்டோலை எழுதுபவர்கள், ஃபிடில் வாசிப்