விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
93
மனையில் கும்பெனியாரது படைகள் சூழ்ந்து என்னைக் கைதியாக இங்கு கொண்டு வந்துள்ளனர். ஆட்சியாளர்களாக இருந்த எனது மூதாதையரைப் போன்று என்னையும், எனக்குள்ள உரிமைகளுடன், எனது நாட்டில் நிலை பெறச் செய்தல் வேண்டும் என்ற கருத்தில் இங்கு, சிலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். எனது எதிரிகள் என்மீது வெறுப்பு ஏற்படும் வகையில் குறிப்பாக தளபதி மார்ட்டின், பேஷ்குவி-கலெக்டர் பவுனி, எனது மைத்துனர் சாமித் தேவன், இன்னும் எனது ஊழியர் முத்து இருளப்பபிள்ளை ஆகியோர் தங்களது உள்ளத்தில் தவறான புகார்களை நிறைத்துள்ளனர்.
'நான் பிறந்த எழுபத்து இரண்டாவது நாள், எனது மூதாதையரின் பாரம்பரிய அரச பதவிக்கு நியமனம் செய்யப் பட்டேன். எனது தாயாரும் பிரதானியும், நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் பொழுது, நவாப்பினது அதிருப்தியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது நான் இளம் பிள்ளையாக இருந்ததால் அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியாத நிலை. நவாப்பினுடைய படைகளது ஒத்துழைப்புடன் கும்பெனியார் இராமநாதபுரம் கோட்டையை வளைத்துப் பிடித்து, செல்வமனைத்தையும் கைப்பற்றி என்னையும், எனது தாயார், சகோதரிகள் இன்னும் சிலரையும் இந்த திருச்சிக் கோட்டையில் பத்து ஆண்டுகள் காவலில் வைத்தி ருந்தனர்.
1780-ம் வருடம் மன்னர் ஹைதர் அலிகான் கர்நாடக சீமைக்குள் புகுந்து தனது குதிரைப்படையைக் கொண்டு எல்லாப் பகுதிகளிலும் கொள்ளையும் அழிமானமும் ஏற்படுத்திய பொழுது, மாப்பிள்ளைத் தேவரும் எனது தமக்கையின் கணவனான சாமித் தேவனும், எதிரிகளிடம் சேர்ந்து இராமநாதபுரம் சிமைக்கு கள்ளர்களை திரட்டி வந்து இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தனர். அவர்கள் சீமையைக் கொள்ளையிட்டது அல்லாமல், அமில்தார்களை துரத்திவிட்டு கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினர். அப்பொழுது பல அணிகளது தலைவர்களாக இருந்த அலுவலர்களுக்கு இந்தப் படையெடுப்புப் பற்றிய முழு விபரமும் தெரியும். இந்தப் போரில் சின்ன மருது சேர்வைக்காரனும், அவனது தமையன் வெள்ளை மருது சேர்வைக்காரனும், எதிரிகளது படைகளை