பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

எஸ். எம். கமால்

ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவைகளுக்கான காரணங்களை தங்களிடமிருந்து நான் வலிந்து பெற முடியாது. என்றாலும், நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆதலால் எனது சிறைத் தண்டனைக்கான குற்றச்சாட்டுப் பிரதி ஒன்றை எனக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அல்லது என்னையோ, அல்லது எனது பிரதிநிதியையோ வைத்து நேர்முக விசாரணை ஒன்றை நடத்தினால் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக தங்களுக்கு எழுதிய ஆங்கிலக் கடிதத்திற்குப் பிறகு, இராமநாதபுரத்தில் நடந்துள்ளவைகளையும் இங்கு விவரித்துச் சொல்ல விரும்புகிறேன். மாசி மாதம் இருபது அல்லது இருபத்து ஒன்றாம் தேதி பவுனியும், மார்ட்டின்சும், இன்னும் இருவரும் ஒரு துபாஷாடன் எனது அரண்மனை முகப்புக்குச் சென்று, அங்கிருந்த எனது பிரதானியின் மகனை எனது மேல் விட்டிற்கு அழைத்துச் சென்று. அரண்மனையின் உள்ளே ஏராளமான பொன்னும் பொருளும் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவைகளைக் கொண்டுவந்து ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டனர். அவை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்ற அவனது பதிலைக் கேட்டவுடன், அங்கிருந்து அவனை ஏசி துரத்தி அனுப்பினர். பின்னர், அவர்கள் பெண்டுகள் இருக்கும் தனிமைப் பகுதியின் வாசலுக்குச் சென்று, அங்கிருந்த பணியாளர்களிடம் தாங்கள் அந்தக் கட்டிடத்துக்குள் நுழையப் போவதாகத் தெரிவித்தனர். எனது அனுமதியில்லாமல், யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களுக்குரிய எனது உத்தரவாகும். இது எனது நாட்டிலுள்ள நடைமுறை மட்டுமல்லாது பொதுவாக கர்நாடகம் முழுவதற்குமேயுள்ள பழக்கமாகும். பெரிய இடத்துப் பெண்கள் உள்ள பகுதிக்குள் புகுவது பற்றிய தகாத தன்மையை தெரிவித்த காவலாளிகளை மார்ட்டின்சும், பவுனியும் பயமுறுத்தி, அவர்களை உதைத்தனர். அதனால் பயந்துபோன அவர்கள் உள்ளிருந்து வந்த பெண் பணியாட்களை அழைக்க, அவர்களும் உள்ளே போய் அங்கிருந்தவரை அழைத்து வருமாறு பயமுறுத்தினர். அவர்களிடம் அரண்மனையின் உட்பகுதியில் ஏராளமான பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும், அதனை ஒப்படைத்து விடுவது அரசரது