பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

97

மனைவிக்கு நல்லது என்றும், இல்லையென்றால் சிப்பாய்களை அனுப்பி அவைகளைக் கைப்பற்ற வேண்டியது ஏற்படும் என்றும் மிரட்டினர். இத்தகைய நடவடிக்கையினால், அரசரது பெண்டுகள் உயிரை விட்டுவிடுவர் என பணியாளர்கள் பதிலளித்தனர். பணத்தை ஒப்படைக்காவிட்டால் உள்ளே சிப்பாய்களை அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதை மீண்டும் பவுனி தெரிவித்தார்.

அந்தப் பணிப்பெண்கள் மிகவும் பீதி அடைந்தவர்களாக எனது மனைவியிடம் சென்று விபரத்தைத் தெரிவித்தவுடன், தங்களது மானத்தையும், உயிரையும் காத்துக் கொள்ள தங்களிடம் உள்ள பொன்பொருள் அத்தனையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வருத்தப்பட்டனர். அப்பொழுதும் திருப்தி அடையாத பவுனியும், மார்ட்டின்சும், இன்னும் கூடுதலான பொருள்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அவைகளையும் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், தவறினால் அடுத்தநாள் காலை அங்கு சிப்பாய்கள் அனுப்பப்படுவர் என்றும் பயமுறுத்திவிட்டுத் திரும்பினர். இத்தகைய வார்த்தைகளை அதுவரை கேட்டிராத அந்தப் பெண்மக்களின் உள்ளப்பாங்கு எவ்விதம் இருந்திருக்கும் என்பதைத் தாங்களே உணர்ந்து கொள்ளுமாறு தங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

கும்பெனியாரால் சிறைப்படுத்தப்பட்டுள்ள நான் என்னிடம் கோரப்படுகிற எல்லாவற்றிற்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பெண்களை இவ்விதம் நடத்துவது கர்நாடகத்தில் அரசர்களது குடும்ப கவுரவத்தின் உயர்வை எவ்விதம் குறைவுபடச் செய்யும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது மச்சு வீட்டை, பவுனி ஆக்கிரமித்து வசித்து வருகிறார். இராமலிங்க விலாசம் என அழைக்கப்படும் கொலுமண்டபத்தில் அவரது கச்சேரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில்தான் எனது முடிசூட்டுவிழா சடங்குகள் நடைபெற்றன. இந்தப் புனித இடத்திற்கு வியாபாரிகளையும் மற்றவர்களையும் வரவழைத்து இந்தச் சீமையின் உரிமை யாருக்கு உரியது என்பதை தெரிவிக்குமாறு பவுனி கேட்டு வருகிறார். தனக்குச் சாதகமான பதிலைச் சொல்லாதவர்களைத் தமது எதிரியாக நடத்துவதுடன், அவர்களிடமிருந்து அவருக்குச் சாதகமான விபரங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு வருகிறார்.