விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
117
கி.பி. 1799-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி காலை, அமைதியைக் குலைத்து முதுகுளத்துாரில் துப்பாக்கிகள் படபடக்கும் முசை கேட்டது. சர்க்கார் கச்சேரி முன்னர் வேலும் வாளும் நாட்டுத் துப்பாக்கிகளும் பிடித்த மறவர் கூட்டம் ஒன்று திரண்டு நின்றது. கச்சேரிக்குள்ளிருந்த அமில்தார் அடித்து இழுத்து வரப்பட்டார். அங்கு காவலில் இருந்த கும்பெனி சிப்பாய்களது துப்பாக்கிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. மறுத்த சிப்பாய்களுக்கு உதை விழுந்தது. அடுத்து அபிராமம் கச்சேரியைத் நாக்கி அங்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அமில்தாரை அழைத்துச் சென்று கும்பெனியாரது துணிக் கிடங்கை திறந்து விடுமாறு பலவந்தப் படுத்தினர். கூடி நின்ற மக்கள் சர்க்கார்த் துணிகளை கொள்ளையிட்டு அள்ளிச் சென்றனர். இதனைப் போன்றே கமுதிக் கச்சேரியிலும் ஆயுதங்களும் தானியக்கிடங்கும் கைபபறறபபடடன.[1]
பொது மக்கள் கும்பெனியாருக்கும் எதிராக கிளர்ந்து எழுந்து வன்முறையில் ஈடுபட்ட இத்தகைய நிகழ்ச்சி, அன்று முதுகுளத்துார் தொடங்கி அபிராமம், கமுதி ஆகிய ஊர்களில் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக் கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர், மயிலப்பன் என்ற குடிமகன் ஆவார்.
அவரது அறிவுரைப்படி குடிமக்கள் கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைப் பணத்தைச் செலுத்த மறுத்தனர். இந்த நிகழ்ச்சி ஒரு பெரும் இயக்கமாக மறவர் சீமையில் உருவெடுத்தது. எண்ணற்ற கிராம மக்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.[2] மேலும் அவர்களது காணிகளை மேனாட்டு முறைப்படி அளவிடுவதற்கு (சர்வே) ஈடுபட்டுள்ள கும்பெனியார் ஊழியர்கள் அவர்களது கடமைகளைச் செய்யவொட்டாமல் தடுத்தனர். அவர்களுக்கு இடைஞ் சல்களை ஏற்படுத்தினர்.[3]