விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
127
திரும்பினர். ஆனால் இந்த மன்னிப்பு கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்திய மயிலப்பனுக்கும், முத்துமருப்பபிள்ளை ஆகிய இருவருக்கு மட்டும் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை உயிரோடு பிடிப்பதற்கு திட்டமிட்டனர். அவர்கள் தலைக்கு விலையாக பரிசுகளும் ஏற்படுத்தி இருந்தனர். மயிலப்பன் கடலாடி வழியாக காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளம், வில்லார் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்று சில நாட்களைக் கழித்த பிறகு கமுதிக்குள் நுழையாமல் மண்டல மாணிக்கத்திற்கு வந்தார். அங்குள்ள நிலவரங்களை நன்கு புரிந்து கொண்டு மாறு உடையில் தஞ்சைப் பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு சிலகாலம் விவசாயக் கூலியாக தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் தெரிகிறது.[1]
மக்களது ஆவேசம், நியாய உணர்வுகள் இவைகளின் உந்துதல்கள் அலைகடலைவிட வேகமாக விரைவாக பொங்கிப் பொருமி வீரமரணப் போராட்டமாக பரிணமித்து பெரும் புயலாக மாறுகிறது. ஆனால் இடைப்படுகின்ற சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் அந்த சண்ட மாருதத்தையும் சாந்தமடையச் செய்து விடுகின்றன. விண்ணை நொறுக்கி விடுவதுபோல வெடி முழக்கம் செய்கின்ற பேரிடி பூமியில் விழுந்தவுடன் நொடி நேரத்தில் மறைந்து விடுவதைப் போல் தயக்கமும் தளர்ச்சியும் இல்லாமல் தாய்நாட்டிற்காக, தன்னரசு ஆட்சிக்காக, தங்களது அரிய உயிரையும் உதவ ஓடோடி வந்தவர்கள், இழப்புகளைக் கருதாமல் இலட்சியத்தை நோக்கி ஓடியவர்கள், போராட்டத்தின் இறுதியில் இவ்வாறாக மாறிவிட்டனரே ஏன்? அநாகரிகமான முறையில் அவர்கள் மீது அவிழ்த்து விடப்படுகின்ற அடக்குமுறைக் கொடுமைகள், அவைகளை எதிர்த்து மேலும் முன்னேற இயலாத மனப்பக்குவம் காரணமா? அல்லது கிளர்ச்சியின் விளைவுகள் எதிர்பார்த்த அளவிற்கு எய்தப் பெறவில்லையே என்ற ஏமாற்றமா?
ஜூன் மாதம். இரண்டாவது வாரம், மறவர் சீமை முழுவதும் அமைதி நிலவியது. வேகமாக வெடித்துப் பரவி, பின்னர்
- ↑ Madurai District Collectorate, Vol. 1139, p. 45.