பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

135

நம்பிக்கை இராமநாதபுரம் சீமையில் கலெக்டர் ஜாக்ஸன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த 'ரங்கபிள்ளை ஊழல்' சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை தயாரித்து அனுப்புவதில் கலெக்டர் ஈடுபட்டிருந்தார். பாஞ்சைப் பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. அந்த பாளையத்தின் பாளையக்காரர் ஆன கட்டப்பொம்மு நாயக்கரை பிடித்து கயத்தாற்றில், தூக்கில் தொங்கவிட்டு பாஞ்சாலங்குறிச்சியை தரைமட்டமாக்கிய பிறகும், கும்பெனியாரிடையே ஒருவித பயமும் அருவருப்பும் இருந்துவந்தது. அதனால் அரசு ஆவணங்களில் அந்தக் கோட்டையின் பெயர்கூட. இடம் பெறாதவாறு செய்தனர்.[1]

இதற்கு வலுவூட்டும் வகையில் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து ஊமைத்துரை தமது நண்பர்களுடன் 2-2-1801 அன்று இரவு தப்பித்து ஓடியச் செய்தி அமைந்தது.[2] அழிந்த பாஞ்சை மீண்டும் உருப்பெற்று எழுந்தது. ஊமைத்துரை மீது கும்பெனியாரது தாக்குதல் தொடுக்கப்பட்டது.[3] போரின் முடிவு பரங்கியருக்கு சாதகமாக அமைந்ததால் ஊமைத்துரை பலத்த காயங்களுடன் சிவகங்கை மருது சேர்வைக்காரர்களிடம் தஞ்சம் புகுந்தார்.[4] அதுவரை கும்பெனியாரது செல்லப் பிள்ளைகளாக இருந்து வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், கும்பெனியாரது சினத்துக்கு ஆளானார்கள். மருது சகோதரர்களும் இந்த சூழ்நிலையை எதிர்பார்த்து தக்க முன்னேற்பாடுகளில் முனைந்து இருந்தனர். திண்டுக்கல், மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இராணுவ நிலைகளில் இருந்த கும்பெனிப்படைகள் மறவர் சீமையிலும், சிவகங்கைச் சீமையிலும் பாய்ந்து புகுந்தன. வழக்கம் போல எட்டப்பனும் தொண்டைமானும் கும்பெனியாரது அணியில் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவான 'தொண்டுகளை' செய்து வந்தனர்.


  1. Date I. C. 5., Tinnenely Gazetteer (1917), p. 85.
  2. குரு குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931), பக். 263.
  3. குரு. குகதாஸப்பிள்ளை, திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931), பக். 271.
  4. Military Consultations, Vol. 285 A, 11-6-1801. pp. 5051-52.