பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

165

அவர்களுக்கு கையில் 'இனாமு'ம் கொடுத்து அனுப்பி வைத்தார். இனாம் தொகை ரூ. 30,000/- கவர்னருக்கு கொடுத்தது மட்டும் ரூ. 7,000/- இதைத் தவிர இந்த அரண்மனையில் வெள்ளையருக்கு விருந்து நடக்காத இரவோ, பகலோ இல்லை யென்று சொல்லும் அளவிற்கு பரங்கிகளுடன் குலவிய நவாப் முகம்மது அலியின் குடும்பத்திற்கு கும்பெனியார் அந்த மாளிகையை ஏலத்தில் விடுவதைவிட வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இவ்விதம், கும்பெனியார் மீது கொண்டிருந்த பொய்மையான மயக்கத்தினால் அவர்களை முழுக்க முழுக்க நம்பி செயல்பட்ட முகம்மது அலி, நாட்டுப்பற்றும் பேராற்றலும் மிக்க பூலித் தேவர், கம்மந்தான் சாகிபும், முத்துராமலிங்க சேதுபதி மன்னர் போன்ற ஒப்பற்ற வீரர்களை கும்பெனியாரது கொடுமைக்கு பலியாக்கினார். ஆனால் அந்த நவாப்பும், அவருடைய வாரிசு களும் அதே கும்பெனியாரின் கொடுமைக்கு தப்பியவர்கள் அல்ல என்பதை வரலாறு உணர்த்துகிறது.


3. தளபதி மார்ட்டின்ஸ்

ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிச் சேவகத்தில் மறவர் சீமைக்கு வந்த போர்ச்சுக்கல் நாட்டு வீரன், கி பி. 1772-ல் ஆற்காட்டு நவாப் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தவுடன், அந்தக் கோட்டையின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டான். முத்துராமலிங்க சேதுபதி மன்னர் கி. பி. 1781-ல் விடுதலை பெற்று, மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகும் தொடர்ந்து கோட்டைப் பொறுப்பு அலுவலராக இருந்து வந்தான். அத்துடன் கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் மறவர் சீமை அரசியலை அந்தரங்கமாகத் தெரிவிக்கும் அரசியல் ஒற்றனாகவும் இருந்தான். இவனது 'அறிவுரை' யைக் கேட்டு வந்த இராமனாதபுரம் அரசரின் பிரதானி முத்து இருளப்பபிள்ளை, விரைவிலேயே கும்பெனியாரது 'செல்லப் பிள்ளை'யாக மாறிவிட்டார். இந்த இரு பிரமுகர்களின் பெரு முயற்சியினால் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது திட்டம் தோல்வியுற்று வாழ்நாள் முழுவதும் திருச்சி, சென்னைக் கோட்டைகளில் அரசியல் கைதியாக இருந்து இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.