பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

எஸ். எம். கமால்


கி. பி. 1781-ல் ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைத்தேவனும் கி. பி. 1801-ல் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரும் கிளர்ச்சிக்காரர்களுடன் இராமனாதபுரம் கோட்டையை கைப்பற்ற முயற்சித்த பொழுதும், கி. பி. 1799-ல் முதுகுளத்துார் பகுதியில் மக்கள் கிளர்ச்சி வெடித்தபொழுதும், அவைகளை முறியடிக்க திட்டம் திட்டித் தந்தவனும் இந்த தளபதிதான். இலங்கை செல்லும் வழியில் கி பி 1797-ல் இராமனாதபுரம் கோட்டைக்கு வந்த தளபதி வெல்ஷ் தமது குறிப்புகளில் இவனைப்பற்றி வரைந்துள்ளான். உலகத்திலேயே விருந்தோம்பலுக்குப் பெயர் போன இந்த நாட்டில் இந்த வயோதிக தளபதி சிறந்து விளங்குவதாகவும் அவரது இல்லத்து நிலவறையில் சிறந்த ரக சாராயங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததையும், இந்த மனிதனது கோமாளித்தனமான தோற்றம், நடவடிக்கைகள் பற்றியும் நகைச்சுவையுடன் வரைந்து வைத்துள் ளான். கி. பி. 1801-ல் இராமனாதபுரம் வந்த ஜியார்ஜ் வாலண்டினா பிரபுவும் தமது புக் ஆல் டிராவல்ஸ்' என்ற நூலில், இந்தப் பரங்கியை குறிப்பிட்டுள்ளார்.

இராமனாதபுரம் கோட்டைக்குள் வட பகுதியில் உள்ள புராடஸ்டண்ட் தேவாலயத்தை நிர்ணயிப்பதற்கு இவன் பெரு முயற்சி எடுத்துக் கொண்டான். 7.10-1810-ல் இறந்த இந்த தளபதியின் சடலம் அதே தேவாலயத்தின் தென்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

4. பிரதானி முத்து இருளப்ப பிள்ளை

இராமனாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் பகுதியில் பிறந்த இவர் பிள்ளைப்பருவத்திலேயே தந்தையை இழந்தார். இவருக்கும் இவரது விதவைத் தாயாருக்கும் புகலிடம் கொடுத்துக் காத்தவர் உச்சிநத்தம் கிராம நிலக்கிழார் மல்லையரெட்டியார். அவரது ஆதரவில் வளர்ந்து கல்வியில் தேர்ந்த இவருக்கும் இராமனாதபுரம் கோட்டைத் தளபதி மார்ட்டின்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆங்கில மொழியில் அவர் பெற்று இருந்த சிறந்த ஞானம் அவருக்கு துணையாக அமைந்து இருத்தல் வேண்டும். தளபதியின் பரிந்துரையின் பேரில், சேதுபதி மன்னர், இவரைத் தயது பிரதானியாக பணியில் அமர்த்தினார்.