பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

எஸ். எம். கமால்

ராக இருப்பதையும் சேதுபதி மன்னர் புரிந்து கொண்டவுடன், மன்னரது ஒப்புதல் இல்லாமல் மதுரைக் கலெக்டர் மக்ளாயிட்டின் கீழ் மதுரை மேலுர் பகுதிக்கு கும்பெனியாரது குத்தகைதாரராக மாறிவிட்டார். கள்ளர்களது வெறுப்பிற்கும் அவமதிப்பிற்கும் ஆளாகி கும்பெனி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக கி.பி. 1791-ல் கலெக்டர் அவரை குத்தகைதாரர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையில் இராமனாதபுரம் சமஸ்தான வரவு செலவு கணக்கை நேர் செய்து கொடுக்குமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டும் அதில் கவனம் செலுத்தாமல் தமக்கு மன்னரால் தீங்கு ஏற்படலாம் என பயந்து தளபதி மார்ட்டின்ஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார். மாறாக, அவனுடன் இணைந்து மன்னருக்கு எதிரான பல புனைந்துரைகளை அனுப்பி, இராமனாதபுரம் சீமை அரசியலில் கும்பெனியார் நேரடியாகத் தலையிடுவதற்கு உதவி வந்தார். 8-2-1795-ல் கும்பெனியார் சேதுபதி மன்னரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்த பிறகு, தற்காலிக பேஷ்காராாக, கும்பெனியாரால் நியமனம் செய்யப்பட்டார். மீண்டும் கம்பம், பெரியகுளம் பகுதிக்கு கும்பெனியாரது குத்தகைதாரராக நியமனம் பெற்றார்.

இவ்விதம் காலமெல்லாம், கும்பெனியாரது எடுபிடியாக இவர் பணியாற்றி வந்தார் என்பதை அவர்களது ஆவணங்கள் காட்டுகின்றன. சிறந்த நிர்வாகியென பெயர் பெற்ற இந்த சேது நாட்டு குடிமகன், தான் பிறந்த மண்ணிற்குரிய பண்புகளை மறந்து, மாற்றானுக்கு துணைபோனதை வரலாறு மறக்காது. கம்மந்தான் கான் சாகிபுவைப் பிடித்துக் கொடுத்த சீனிவாஸ்ராவ், கட்டபொம்முவை காட்டிக் கொடுத்த புதுக் கோட்டைத் தொண்டமான், மருது பாண்டியர்களது வீழ்ச்சியை உண்டாக்கிய வன்னித்தேவன், கட்டை சேர்வைக்காரன் ஆகிய மக்கள் விரோதிகள் அணியில், முத்துராமலிங்க சேதுபதி மன்னரது முடிவிற்கு உதவிய முத்து இருளப்ப பிள்ளையையும் சேர்த்து, எண்ணப்படத் தக்கவராக உள்ளார்.

5. ராணி மங்களேசுவரி நாச்சியார்

கி.பி. 1795 வரை மறவர் சீமையை ஆண்ட இராமனாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது மூத்த சகோதரி இவர். மன்னரது தந்தையைத் திருமணம் செய்து கொள்வதற்கு