பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
172
எஸ். எம். கமால்
 


பெயரளவில் வாணிபக் கழகமாக இயங்கிய இந்தக் கூட்டுக்கொள்ளை நிறுவனத்தை இங்கிலாந்து அரசியாக இருந்த விக்டோரியா ராணியார் கி.பி. 1858-ல் கலைத்து உத்தரவிட்டு அந்த நிறுவனம் சம்பாதித்து வைத்து இருந்த இந்திய நாட்டுப் பகுதிகள் அனைத்தையும் தமது ஆங்கிலப் பேரரசின் பகுதியாக மாற்றி விட்டார். இங்ஙனம் ஆங்கில ஆட்சியுடன் இணைக்கப்பட்ட நமது நாட்டின் விடுதலையைப் பெறுவதற்கு நமது முன்னோர்கள் பல தியாகங்களைப் புரிந்து போராடியதை பல விடுதலை இயக்கங்கள் எடுத்துச் சொல்கின்றன.

7. துபாஷ் ரங்கப்பிள்ளை

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழக அரசியலை தமதுடமையாக்கிக் கொண்ட கும்பெனியாருக்கு. தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள தமிழர், வடுகர், இசுலாமியர் ஆகியோரது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கும். பாளையக்காரர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கும். மொழி பெயர்ப்பாளர்கள் இன்றியமையாதவர்களாக இருந்தனர். அவர்கள் துவி-பாஷி (இருமொழியாளர்) அல்லது துபாஷ் என வழங்கப்பட்டனர். அவர்களில் துபாஷ் பச்சையப்ப முதலியார் (காஞ்சிபுரம்) துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை (பாண்டிச்சேரி) துபாஷ் அப்துல்காதர் (அபிராமம்) ஆகியோர்களை இன்னும் மக்கள் நினைவுக் கூறப்படுகின்றனர்.

அவர்களைப் போன்று இராமனாதபுரம் சீமை வரலாற்றில் பெயர் போனவர் துபாஷ் ரங்கப்பிள்ளையாகும். சென்னையை அடுத்த ஆச்சாள்புரத்தில் சோழமண்டல கருணிகர் குலத்தில் பிறந்த இவரது மூதாதையர்கள் கும்பெனி கவர்னராக இருந்த எலிஜா எல் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தனர். இவரும் சென்னைக் கோட்டையில், ஜார்ஜ் ஸ்டிரஸ்டடனி, ஜார்ஜ் பவுனி ஆகியோருக்கு துபாஷாக இருந்தார். பின்னர் காலின்ஸ் ஜாக்லன் இராமநாதபுரம் சீமைக் கலெக்டராக பணியேற்ற பொழுது அவரது துபாஷாக இராமநாதபுரத்திற்கு வந்தார். கலெக்டருக்கு ரங்கபிள்ளை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. துபாஷ் தமது சுயநலத்திற்கு அதனைப் பயன்படுத்தினார். விரைவிலேயே ஜாக்ஸனது நிர்வாகம் ஊழல் மிகுந்து உழன்றது.