பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

எஸ். எம். கமால்

சென்னை நயினியப்பமுதலி, சென்னை ஷேக் தமால்ஜி ஆகியோர்களிடம் ரங்கப்பிள்ளை வசூலித்த தொகைகள் மட்டும் திரும்பக் கிடைக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

8. இராமலிங்க விலாசம்

சேதுபதி மன்னர்களது சிறப்பான இருக்கையாக விளங்கிய இடம். இராமனாதபுரம் சேதுபதி மன்னர்களில் இணையற்ற பெருமன்னராக விளங்கிய ரெகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி (கி.பி. 1674-1710) இந்த அரண்மனையை அமைத்தார். இதனையும் இதனைச் சூழ்ந்த இராமனாதபுரம் கோட்டையையும் அமைக்க கீழக்கரைப் பெருவணிகரும் சேதுபதி மன்னரது நல்லமைச்சருமான வள்ளல் சீதக்காதியின் பெரும் பொருளும் அரும் உழைப்பும் உதவியதாக வரலாற்று ஆவணங்களில் வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னர்களது ஆட்சி பீடமாகவும் அத்தாணி மண்டபமாகவும் விளங்கிய இந்த அரண்மனையை அழகுப் பேழையாக மாற்றியமைத்தவர்கள் விஜய ரகுநாத சேதுபதி (1710-25) , முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி (1730-35) சிவகுமார், முத்துக்குமா சேதுபதி (1784-1747) ஆகியவர்கள்.

இந்த சிங்கார மாளிகை உயர்ந்த மதில்களும், வளைந்த விதானங்களும், வண்ண ஓவியங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. இராமாயண, பாகவதக் கதைகளைச் சொல்லும் ஓவியங்களையும், வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் ஒவியங்களும் அடுத்தடுத்து வரையப்பட்டுள்ளன. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மன்னர் சேதுபதி மன்னருக்கு ரத்தின அபிஷேகம் செய்தல், முத்து விஜயரகுநாத சேதுபதியின் தெய்வீகத் தொடர்புகள், சேதுபதி மன்னருக்கு அன்பளிப்புகளுடன் பரங்கியர் காத்து இருத்தல், அந்தப்புர கேளிக்கைகள், மராத்தியருனான அறந்தாங்கிப் போர், மறவர் சீமைக்குள் புகுந்த மராத்தியரைக் கைது செய்தல், அரண்மனையில் உறங்கிவிட்ட தமிழ்ப் புலவருக்கு ஆயாசம் தீர உபசரித்தல் போன்ற காட்சிகள் கண்ணையும், கருத்தையும் கவருவனவாக உள்ளன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறவர் சீமையில் இருந்த மகளிரது வீர விளையாட்டுக்கள், ஆடல் குட்டியர், ஆரணங்குகளின் ஆடை அணிகலன்கள், படைவீரர்களது ஆயுதங்கள், அரச