பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

எஸ். எம். கமால்

நாளெல்லாம் நாட்டு விடுதலை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து செயல்படும் பொழுதே மரணம் அவரைப் பறித்துக் கொண்டு போய் விட்டது. என்றாலும் அவரது சிறந்த பண்புகளையும் செயல் திறனையும் நாடோடி இலக்கியமான 'கான்சாகிபு சண்டை' யும் குழந்தைக் கவிராயரது மான்விடு தூதும் காலமெல்லாம் கட்டியங் கூறிக்கொண்டு இருக் கின்றன.

12. மருது சேர்வைக்காரர்கள்

மறவர் சீமையின் முப்பெரும் இனத்தில் ஒன்றாகிய 'அகம்படியர்' பெரும்பாலும் இராமனாதபுரம் சேதுபதி மன்னரது பணியில் இருந்து வந்தனர் அவர்களில் முக்குளம் கிராமத்தினைச் சேர்ந்த மொக்கைப் பழனி சேர்வை என்பவரது மக்கள் தான் வரலாறு புகழும் மருது சகோதரர்கள். மூத்தவர் வெள்ளை மருது அல்லது பெரிய மருது என்றும், இளையவர் சின்னமருது அல்லது மருது பாண்டியன் என்றும் வழங்கப்பட்டனர். இவ்விருவரும் மறவர்களுக்குரிய ஆண்மையும் மனத் திண்மையும் பெற்று இருந்ததுடன், மற்றவர்களுக்கு இல்லாத உடல் வலிவும் வாய்க்கப் பெற்று இருந்தனர். இவர்களது தந்தையார் இராமனாதபுரம் மன்னரது பணியில் இருந்ததனால், இவ்விருவரும் அந்த மன்னரது உறவினரான சிவகங்கை மன்னரது சேவகத்தில் அமர்த்தப்பட்டனர்.

மிகச் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அவர்கள் விரைவில் சிவகங்கை மன்னரது அந்தரங்கப் பணியாளர்களாக மாற்றம் பெற்றனர். இயல்பாகவே, அவர்களிடம் பொருந்தி இருந்த பேராற்றல்கள் மன்னரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத பெரிய உடையாத் தேவர் கி.பி. 1772 ல் காளையார்கோவில் கோட்டைப் போரில் ஆற்காட்டு நவாப்பின் படைகளுடன் மோதி வீரமரணம்எய்தினார். பிரதானி தாண்டவராய பிள்ளையுடன் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அரசியல் தஞ்சம் பெற்ற ராணி வேலு நாச்சியாரது அந்தரங்கப் பணியாளர்களாக இருந்து வந்தனர். கி.பி.1780-ல் ஹைதர் அலி மன்னர் அளித்த உதவிப் படைக்குத் தலைமை தாங்கிய சிவகங்கை ராணியுடன் இந்தச் சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை ஆக்கிரமித்து இருந்த ஆற்காட்டு நவாப்பின்