பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

எஸ். எம். கமால்

வழிகளிலும் பயனுள்ள பாளையக்காரராக இருந்த மருது சகோதரர்களையும் சும்மா விடவில்லை. இதனைப் புரிந்துகொண்ட மருது சகோதரர்கள் கும்பெனியாரது ஆதிக்க வெறியை எதிர்ததுப் போராடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆங்காங்கு துளிர்விட்ட தென்னகத்துப் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டனர். மகாராஷ்டிரம். மைசூர், வயநாடு மாநிலங்களில் உள்ளவர்களும், மதுரை. நெல்லை, திருச்சி, சீமைப் பாளையக்காரர்களுடனும் ஒருங்கிணைந்து பரங்கியரைப் பலவழிகளிலும் அழிப்பதற்கு முனைந்தனர். காலங்கடந்த அந்த நிலையிலும் அவர்கள் பல பாளையக்காரர்களையும், பொதுமக்களையும் அணி திரட்டி பல இடங்களில் பரங்கியருடன் மோதினர். முதுகுளத்துார், கமுதி, அபிராமம். குளத்துர், பாஞ்சை, கொடுமலூர், பரமக்குடி, சாலைக்கிராமம். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பிரான்மலை. திருப்பத்துார், ராஜசிங்கமங்கலம், அரண்மனை, சிறுவயல். கொல்லங்குடி , காளையார்கோவில் ஆகிய ஊர்கள், இந்திய நாட்டு விடுதலைப் போராட்டக் களங்களாக மாறின. நாட்டுப்பற்று மிக்க நூற்றுக்கணக்கான நல்லவர்கள் தங்கள் நல்லுயிரைக் காணிக்கையாகத் தந்தனர். இந்தப் போராட்டத்தின் பொழுது, துரோகிகளும் தங்கள் பங்கினை நிறைவேற்றத் தவறவில்லை.

முடிவு, பரங்கியரை ஏதிர்ப்பதற்குத் திரட்டப்பட்ட மக்கள் அணி பிரிவு கண்டது. இந்தப் பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் பரங்கியரை இறுதிவரை எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்கள் தோல்வி கண்டனர். அவர்களையும், அவர்களது மக்கள், உறவினர், கூட்டாளிகள் அனைவரையும் கும்பெனியார் தூக்கில் தொங்கவிட்டு மகிழ்ந்தனர். கும்பெனியார் எஞ்சி யிருந்த எழுபத்து இரண்டு முதன்மை வீரர்களும் நாடு கடத்தப்பட்டு மலேஷிய நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். தன்னாசான சிவகங்கைச் சீமை ஜமீனாக' மாற்றப்பட்டது. அரிமாக்கள் ஆட்சி செய்த இடத்தில் அணில்கள்!

இந்திய நாட்டு விடுதலைப் போர் வரலாற்றின் இணையற்ற முன்னோடி வீரர்களான இந்த இருபெரும் சகோதரர்களும், மறவர் சீமையின் ஒளிவீசும் மாணிக்கங்களாக மக்கள் மனதில் நிலைபெற்றுள்ளனர். அவர்களது வீர உணர்வும், தியாகமும் எதிர்கால சந்ததிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.