பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
எஸ். எம். கமால்
 

மறவர்கள் ஆட்சி செய்தனர் என்றும், விஜய நகர நாயக்கர்கள் தமிழகத்தைக் கைப்பற்றும் வரை மறவரது இந்த தன்னரசு நீடித்தது என்றும் தெரிகின்றது.[1] இதனைப் போன்று இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சேதுபதி மன்னர்களது தொன்மைச் செய்திகளும் இராமநாதபுரம் மானுவலில் வரையப்பட்டுள்ளன.[2]

மற்றும், சேதுபதி அரச வழியினர், பதினோராம் நூற்றாண்டில் பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு, ஈழத்தையும் வெற்றிக்கொண்ட ராஜராஜ சோழதேவன் இராமேசுவரம் கடற் பாதையைக் கண்காணிப்பதற்கு நியமித்த மறவர் தலைவரது வழியினர் என்றும், பாண்டிய நாட்டை கி.பி. 1170-ல் கைப்பற்றி இராமேசுவரம் கோவிலின் ஒரு பகுதியை நிர்மாணித்த இலங்கை தண்டநாயகனால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதியின் பரம்பரை என்றும் ஆசிரியர் தர்ஸ்டன் குறித்துள்ளார்.[3] சேது சமஸ்தான மகாவித்வானாக விளங்கிய திரு. ரா. ராகவையங்கார், குலோத்துங்க சோழனது காலத்தில் தஞ்சையிலிருந்து பாண்டி நாடு புகுந்த சோழரது தானைத் தலைவர்களாக இருந்து, நாளடைவில் தன்னாட்சி பெற்றவர்கள் சேது மன்னர்கள் என பல ஆதாரங்களை அளித்துள்ளார்.[4]

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்துராசக் கவிராயர் புனைந்துள்ள கைலாய மாலையில், யாழ்ப்பாண நல்லூர் கோயிலை அமைத்த ஆரியச் சக்கரவர்த்தி, இராமநாதபுரம் சேதுபதி மன்னரது உதவியுடன் இராமேசுவரத்திலிருந்த அந்தணர்களை அங்கு வரவழைத்து அந்தக் கோயிலின் குருக்களாக நியமித்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது.[5]


  1. Mahalingam, T. V., Mackenzie Mss. pp. 200-212. (1975), Vol. I
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891), pp. 204, 205
  3. Edgar Thurston, Castes and Tribes of South India, Vol. V. pp. 25, 26.
  4. ரா. ராகவ ஐயங்கார், மகாவித்வான், சேது நாடும் தமிழும் (1932).
  5. Seshadri. Dr. Sethupathis of Ramnad (1972), Thesis, р. 62.