பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
5
 


இங்ங்னம் சேதுபதி மன்னர்கள் பற்றிய செய்திகள் பல தரப்பட்டதாயினும், இந்தச் செய்திகள் சுட்டுகின்ற முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. அதனை ஆசிரியர் நெல்சன், 'பல நூற்றாண்டு காலமாக மக்கள், கூட்டம் கூட்டமாக இராமேசுவரத்துக்கு தலயாத்திரை வந்து செல்வதால், இந்தப் பகுதி (மறவர் சீமை)யில் வலிமை பொருந்திய ஒரு தன்னரசு செயல்பட்டிருந்தாலொழிய இத்தகைய அமைதியான தலயாத்திரை சாத்தியமாக இருந்து வரமுடியாது. ஆதலால் முதலாவது சடைக்கன் சேதுபதி (1604-22)க்கும் முன்னர், இந்தப் பகுதியில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி, செழித்து வந்திருக்க வேண்டும்' என்ற உறுதியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.[1]

இந்த மன்னர்களது தொன்மை எத்தகையதாக இருப்பினும் அவர்கள் பாண்டிய மண்டலத்து நிலக் கூறுகளான கீட்செம்பி நாடு, வடதலைச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு கைக்கி நாடு, பொலியூர் நாடு, களவழி நாடு, கானப்பேர்நாடு, தென்னாலை நாடு, இடையள நாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் நிலப்பரப்பின் அதிபதியாக இருந்து வந்தனர் என்று தெரியவருகின்றது.

இந்த மன்னர்களது நாடு, புனிதமிக்க சேது அணையை அடுத்து இருந்ததால், இலக்கியங்கள் இதனை சேது நாடு என சிறப்பித்து வழங்கின. இந்த நாட்டின் கிழக்கு எல்லை வங்கக்கடலாகவும், மேற்கு எல்லை மதுரைச் சீமையின் கிழக்கு எல்லையாகவும், வடக்கு எல்லை பாம்பாற்றுக் கரையாகவும், தெற்கு எல்லை வேம்பாறு வைப்பாறாகவும் அமைந்திருந்தன. ரகுநாத திருமலை சேதுபதி காலத்திலும், கிழவன் சேதுபதி காலத்திலும் வடக்கு எல்லைகள் பரந்து விரிந்தன. இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும் பகுதி அப்பொழுதைய இராமநாதபுரம் அரசிற்கு உட்பட்டிருந்ததை அங்குள்ள கல்வெட்டுக்களும்[2] பட்டயங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால்,


  1. Nelson, Manual of Madura Country (1868), Part 111 pp. 11-12,
  2. Pudukkottai - State Inscriptions, Mahalingam, T.V., Mackenzie Ms. – No 36. (1974), pp. 200, 202. Rajaram Row, T., Ramnad Manual (1891), pp.