பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எஸ். எம். கமால்

சிப்பாய்களும்) இராமநாதபுரம் சீமையின் வட எல்லையில் முதுவார் நத்தம் கிராமத்தை 3-2-1771-ல் எதிர்பாராத வண்ணம் தாக்கின. இந்த அத்துமீறலை எதிர்த்துப் போரிட்ட மறவர் அணி தொண்ணுாறு வீரமறவர்களை இழந்து ஆறுமுகம் கோட்டைக்குப் பின்வாங்கியது. இதனைத் தொடர்ந்து தஞ்சைப் படைகளை நடத்தி வந்த தளபதி மானோஜி, சுந்தரபாண்டியன் பட்டினம், வாரியூர், கண்ணன்குடி, மங்கலக்குடி, கொண்டவளந்தான், அமைந்தக்குடி ஆகிய மறவர் நிலைகளைக் கைப்பற்றி முன்னேறினார். அடுத்து, இராமநாதபுரம் கோட்டைக்கு நுழைவாயில் போல அமைந்து இருந்த ஆறுமுகம் கோட்டை, மராத்தியரது தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் 19-2-1771-ல் விழுந்தது. அடுத்த நாள் அங்கிருந்து இருபது கல் தொலைவில் உள்ள இராமநாதபுரம் கோட்டையை அந்தப் படைகள் நெருங்கின. துரோகிகளை காட்டி மக்கள் ஆதரவு பெற முயன்ற தஞ்சை மன்னனது எண்ணக் கோட்டைக்கு இடைஞ்சலாக இந்தக் கோட்டை, இரும்புக் கோட்டையாகத் தோன்றியது. பத்து வயது நிரம்பிய சேதுபதி இளவரசரது சார்பாக அரசியாரும், பிரதானி பிச்சைப்பிள்ளையும் மறவர்களின் மானத்தைக் காக்கும் இந்தப் போரில் எதிர்நடவடிக்கைக்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். எத்தனையோ ஒலைகள் அனுப்பி உதவிகோரியும் ஆற்காட்டு நவாப்பு அசையவில்லை. ஆனால், எதிரியை தீவிரமாக எதிர்க்குமாறு ஆலோசனை வழங்கினார் அவர்.[1] மறவர் சீமையின் தன்மானத்தைக் காக்கும் இந்தப் போரில் தஞ்சைப் படையின் எதிர் அணியில் சேர்ந்து கொள்ள புதுக்கோட்டைத் தொண்டமான் ஆற்காட்டு நவாப்பின் அனுமதி கோரினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சும்மந்தான் கான் சாயபுவின் புரட்சியை அடக்க மறவர் உதவியைப் பெற்ற நவாப், இப்பொழுது அவர்களுக்கு உதவ முன்வராமல் மெளனம் சாதித் தார். என்றாலும் கீழ்க்கரையில் சேதுபதி மன்னரது அனுமதியுடன் பண்டகசாலை நடத்தி வந்த டச்சுக்காரர்களின் பரங்கி அணி ஒன்றும் பிரதானி பிச்சப்பிள்ளையின் ஆணையை எதிர்பார்த்து தயார் நிலையில் இருந்தன. இந்த இறுதி ஏற்பாடுகளையும் கடந்து இராமநாதபுரம் கோட்டை எதிரியிடம் சிக்கி


  1. Military Country. Correspondence. Vol. IX. (1 0 2 I 771), pp. 36-38.