பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

எஸ். எம். கமால்

வண்டிகள், மாடுகள், குதிரைகள்-அனைத்தையும் வெள்ளம் வலிந்து இழுத்துச் சென்றது. எதிர்பாராத இந்த இடர்ப்பாட்டினால் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு சிலரைத் தவிர ஏனைய வீரர்கள் உயிர்தப்பி, இங்கும் அங்கும் சிதறி ஓடினர். எங்கும் அவலக்குரல் எதிரொலித்தது. அன்றைய காலைப் பொழுது அலங்கோலக் காட்சியாக காணப்பட்டது. இந்த நிலையில் போரைத் தொடர்ந்து நடத்துவது இயலாதது என்பதை உணர்ந்த தஞ்சை மன்னர், இராமநாதபுரம் அரசியிடம் சமரசம் பேசி உடன்பாடு கண்டார்.[1] போர் செலவுக்காக ஒரு லட்சம் வெள்ளி நாணயங்களுடன், சில சலுகைகளையும் பெற்று அவர் தஞ்சை திரும்பினார்.

1772-ல் மே மாதம், கடைசி வாரம், மீண்டும் ஒரு படை யெடுப்பு: இராமநாதபுரம் கோட்டை வெளியில் தஞ்சைப் படையைவிட அளவிலும், வலிமையிலும், மிஞ்சிய ஆற்காட்டு நவாப்பின் படையும், கும்பெனியாரின் பரங்கிப்படையும் இணைந்து நின்று போர்ப்பறை கொட்டின.[2] எதிர்பாராத போர். பதினைந்துமாத இடைவெளியில் இராமநாதபுரம் கண்ட இந்தப் படையெடுப்பிற்கு நவாப்பின் மகன் உம்தத்-உல்உம்ராவும், ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தும் இணைந்து தலைமை தாங்கினர். இந்தப் படை அணி திருச்சிராப்பள்ளியில் இருந்து விராலிமலை, நத்தம் வழியாக யாரும் எதிர்பாராத நிலையில் இராமநாதபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அதே சமயத்தில், கும்பெனியாரின் இன்னொரு அணி மதுரைக்கோட்டையில் இருந்து கிழக்கே திருப்பூவனம் நோக்கிப் புறப்பட்டது. சிவகங்கைச் சீமையில் இருந்து இராமநாதபுரத்திற்கு ராணுவ உதவி எதுவும் வராமல் தடை செய்வதற்காக[3] பாசறை அணி வகுப்பிற்குப் பிறகு இராமநாதபுரம் அரசியாருக்கு எச்சரிக்கை ஒலை அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களாக கோட்டைக்கு உள்ளும் புறமும் வெள்ளைக்கொடி தாங்கிய தூதுவர்கள் குதிரைகளில் வருவதும் போவதுமாக இருந்தனர்.


  1. M. C. C., Vol. 19, 15-3-1771, p. 106.
  2. Vibart Maj. H. M., Military History of Madras Engineers & Pioneers (1881), Vol. I, pp. 120-121.
  3. Mily. Consultations. Vol. 42, 15-6-1771, p. 44