பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
15
 

அரசியாருக்கு, நவாப் வழங்க வேண்டிய சமாதான உடன்பாட்டில் எத்தகைய வாசகம் அமைய வேண்டும் என்பதில் சர்ச்சைகள் தொடர்ந்தன.


ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தை வெளிப்படையாக சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை, என்பதை புரிந்து கொண்ட நவாப்பின் மகனுக்கு ஆத்திரம் வந்து விட்டது போலும். திடீரென கோட்டையைத் தாக்குமாறு உத்தரவிட்டார். பன்னிரண்டு பவுண்டு குண்டுகளை சொரியும் பேய்-வாய் பீரங்கி இரண்டு, தமது அழிவு வாயைத் திறந்து அக்கினி மழை பெய்தன. பலன் இல்லை. அடுத்த நாளும் (2.6, 1772) பீரங்கித் தாக்குதல் தொடர்ந்தது. பதினெட்டு பவுண்ட் பீரங்கிகள் நான்கு, கூடுதலாக அன்றைய தாக்குதல்களில் கும்பெனியரால் ஈடுபடுத்தப்பட்டன. நாள் முழுவதும் நீடித்த அந்த பலத்த தாக்குதலினால் கோட்டையின் கிழக்கு மதிலில் ஒரு இடத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு பிளவு தோன்றியது.[1] கிழவன் சேதுபதி மன்னரால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடுக்காய் சாற்றிலும், கருப்பட்டி நீரிலும், நனைத்த செங்கற்களை கொண்டு எழுப்பிய அந்த உறுதியான சுவர், இத்தனை ஆண்டுகளாக இயற்கையின் அழிமானத்திற்கு தப்பி நின்றதே பெரும் செயலாகும்.

கோட்டைக்குள் நுழைந்து முன்னேறுவதற்காக மூன்று நாட்களாக ஆயத்த நிலையில் காத்திருந்த நவாப்பின் படைகள் தளபதி பிரைட்வயிட் என்ற பரங்கியின் தலைமையில் வெடித்து பிளந்த மதில் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.[2] அந்நியர்களைக் கண்ட மறவர்கள், ஆர்ப்பரித்து ஆவேசத்துடன் அவர்களை மோதினர். கடும் போர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான மறவர் களத்தில் பலியாயினர். ஆக்கிர


  1. Vibart Maj. H. M., Military History of Madras Engineers (1881), Vol. I, p. 120.
  2. Military Consultations Vol. 42, 8-6-1772, pp. 479. 86.