பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

21

பெனியாருக்கு நவாப்பினுடைய அந்தரங்கம் புரியாமலில்லை. எனினும் படையெடுப்பு மூலம் நவாப்பினால் தங்களுக்கு ஆதாயமும் சலுகைகளும் கிட்டுவதை பரங்கிகள் இழப்பதற்கு தயாராக இல்லை. உடனடியாக திருச்சிக்கு தகவல் அனுப்பி அங்குள்ள அவர்களது படை அணிகளைப் போருக்கு ஆயத்தப்படுத்தினர்.

அதனுடைய தொடர்ச்சி தான் நாம் மேலே கண்ட இராமநாதபுரம் கோட்டைப் போரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் அவரது குடும்பத்தினரும் சிறைப்பிடிக்கப்பட்டதும் ஆகும். அன்று முதல் இராமநாதபுரம் கோட்டை ஆற்காட்டு நவாப்பினால் தளபதி மார்ட்டின்ஸ் என்னும் பரங்கியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்காட்டின் இளைய நவாப் உம்தத்துல்-உம்ராவும் தளபதி ஜோசப் சுமித்தும் தங்களது படைகளை அடுத்த இலக்கான சிவகங்கை கோட்டையை நோக்கி வழி நடத்தினர்.[1]


  1. Mily, Cons. Vol. 42, 26-6-1772, p. 534.