பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

எஸ். எம். கமால்

சீமையில் நிகழ்ந்து வந்த அரசியல் மாற்றங்களும், அவர்களை ஊக்குவித்தன.


இராமநாதபுரத்தை கைப்பற்றிய நவாப், அடுத்த இருபது நாட்களில் சிவகங்கையையும், காளையார்கோவிலையும் கைப்பற்றி சிவகங்கைச் சீமையை, ஆற்காட்டுச் சர்க்காரில் இணைத்து விட்டார். 25.6.1772ல் காளையார்கோவில் போரில் சிவகெங்கை மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையார் தேவர் கொல்லப்பட்டவுடன் அவரது ராணி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராய பிள்ளையும் தப்பித்து மைசூர் மன்னருக்குச் சொந்தமான விருப்பாச்சியில் தஞ்சம் புகுந்தனர்.[1] மைசூரில் அப்பொழுது ஆட்சி செய்த ஹைதர் அலிகானும் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார். அவரிடம் மறவர் சீமையை நவாப்பிடமிருந்து மீட்பதற்கு தமக்கு படை உதவி வழங்க வேண்டுமெனவும் பிரதானி தாண்டவராயப்பிள்ளை கோரினார்.[2]


சிவகெங்கை பிரதானி, ஹைதர் அலிக்கு எழுதிய மடலில்[3] *கர்நாடக நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்து அழிவு ஏற்படுத்தி வருகிறார். தப்பித்து வந்த நான், கள்ளர் அணி ஒன்றுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். இந்தப் பணியில் எனக்கு யார் உதவி செய்தாலும், இன்னும் சிறந்த முறையில் சாதனைகளை ஏற்படுத்த முடியும். ஆகையால் தாங்கள் 5000 குதிரைகளையும் வீரர்களையும் திண்டுக்கல் கோட்டைக்கு அனுப்பி வைத்தால், அவர்களது செலவை நானே ஏற்று, அவர்களுடன் நானும் இணைந்து, அந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும். அத்துடன் மதுரைக்கும் படை அணிகளை அனுப்பிவைத்து அந்தப் பகுதியிலும் எதிர் நடவடிக்கைகளைத் துவக்க இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும், நமக்கு ஒத்துழைப்பு நல்குவர். தங்களுக்கு செலுத்த வேண்டிய நஜர் பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்'. இந்தக் கோரிக்கைக்கு உதவுவதாக ஹைதர் அலி மன்னர் உறுதியளித்தார்.


  1. Kathirvelu. Dr. S., History of Marawas (1972) p. 163.
  2. M. C. C., Vol. 21 (1772), pp. 282-83.
  3. M. C. C., Vol. 21 (1772), p. 282.