பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

29

மணியும், ஊரும் பெயரும் பரிசிலாகப் பெற்றுச் செல்லும் அரங்கம் அது. அழகிய சிற்றம்பலக் கவிராயரது தள சிங்க மாலையும், அமிர்த கவிராயரது ஒருதுறைக் கோவையும், சொக்கநாதப் புலவரது பணவிடு தூதும், தேவை உலாவும் அரங்கேற்றம் பெற்றதும், அவைகளுக்குப் பரிசிலும், இராஜ சிங்க மங்கலமும் பொன்னாங்காலும், புலவர் மான்யமாக வழங்கப் பெற்றது. அங்குதான். இன்னும் சேது நாட்டின் சீர் அலைவாய்க் கரையில் சங்கையும், முத்தையும் நத்தி வந்த போர்த்துக்கீசியரும் டச்சுக்காரரும், பொன்னையும் மணியையும், நிறைத்த பரிசில்களைத் தாங்கி, சேதுபதி தரிசனத்திற்கு காத்திருந்ததும் அங்குதான்.


அங்குள்ள அரசுக் கட்டிலில் அமர்ந்து, முன்னோர் பலர் பன்னூறு ஆண்டுகள் முறை திறம்பாது ஆட்சி செய்து வந்தனர். அதே அரசு கட்டிலில் அமர்ந்து இருந்த விஜய ரகுநாத சேதுபதி, தமது இரு பெண் மக்களது ஒரே கணவர் என்பதைக் கூட கருதாமல் பாம்பன் ஆளுநர் தண்டத் தேவருக்கு, சிவத்துரோகக் குற்றத்திற்காக தயக்கமின்றி கொலைத் தண்டனை வழங்கினார்.[1] தமிழும், தெய்வீகமும் தழைத்து வாழ நீதியும் வீரமும் நிலைக்க, சேதுபதிகள் பலர் செங்கோல் பிடித்து ஆட்சி செய்தது அதே அரசுக்கட்டில்தான். அந்தகட்டிலில் தாமும் அமர்ந்து, அந்த நீண்ட பெரும் தலைமுறையினரின் நியதியையும் பெருமையையும், காத்து ஆட்சி செலுத்த வேண்டும்...

கோட்டை வாசலைக் கடந்து இராமலிங்க விலாசம் அடைவதற்குள் இளவரசர் முத்து இராமலிங்கத்தின் மனத்திரையில் மின்னி மறைந்த எண்ணத் தொகுப்புகள் அவை. நவாப்பிடமிருந்து வந்த பட்டோலையையும், சேது நாட்டு மன்னராக அங்கீகரித்து வழங்கிய சன்னதையும்[2] பிரதானி சங்கர நாராயண பிள்ளை மன்னரிடம் வணக்கத்துடன் வழங்கிய பொழுதுதான், தாம் இராமலிங்க விலாசம் முன்னர் இருப்பதையும், பொதுமக்களும் அரசு அலுவலர்களும், குழுமியிருந்து தமக்கு வரவேற்பு வழங்க காத்து இருப்பதையும் மன்னர் உணர்ந்தார்.


  1. Rajaram Row, Ramnad Manual. (1891), p. 287.
  2. M. C., Vol. 193, A. Sannath dated 7-3-1781, pp. 99-102