பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

எஸ். எம். கமால்

களில் பணி செய்பவர்களுக்கும் பலவகையான ஜீவித மான்யங்களை முந்தைய சேதுபதி மன்னர்கள் வழங்கி இருந்தனர். அதே மரபுகளைப் பின்பற்றி மன்னர் முத்துராமலிங்க சேதுபதியும் பல நிலக்கொடைகளை வழங்கி, கட்டளைகளையும் ஏற்படுத்தினார். ஆலயங்களின் பராமரிப்புக்கென வலுவான அமைப்பு ஒன்றை, நிரந்தரமாக செயல்பட அமைத்தார். கி.பி. 1788-ல் இதற்கென 'தரும மகமை' நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.[1] நஞ்சை நிலங்களின் மகசூலில் தீர்வையை கணக்கிடுவதற்கு முன்னர் கழிக்கப்படுகின்ற பொதுச்செலவுகளுடன் ஒரு சிறுபகுதி தானியம் இந்த மகமை நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இங்ஙனம் சேகரிக்கப்படும் தானிய தொகுப்பின் வருவாயைக் கொண்டு அரசு பொறுப்பில் உள்ள அனைத்து ஆலயங்களின் திருப்பணிகளை மேற்கொள்ளவும் ஆலயங்களில், வேத, புராண, நியாய, விளக்கங்கள் செய்யும் அந்தணர்களுக்கு ஆதரவு அளிக்கவும், ஏழை, எளியவர், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களைக் காத்து வரவும் இந்த நிதியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் ஆலயங்கள் பராமரிப்புக்கென சேதுநாட்டு அரசியல் 'தேவஸ்தானம்' என்ற நிர்வாகப் பிரிவு செயல்படுவதற்கு முன்னோடியான திட்டம் இந்த மகமை நிதியம் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

தனியார்கள் பொறுப்பில் உள்ள சிறுகோவில்களின் தேவைகளுக்கும் உதவுவதற்கென்று இதனை ஒத்த இன்னும் ஒரு பொது நிதியமும் ஏற்படுத்தப்பட்டது. அது 'ஜாரி மகமை' என பெயர் பெறும்[2] மற்றும், சமூகத்தில் கல்வி, பண்பாடு ஆகியவைகளில் செம்மாந்து நின்ற தமிழ்ப் புலவர்களுக்கும், வடமொழி வித்தகர்களுக்கும், வாழ்க்கைச் சுமையினை சிரமமாகக் கருதாமல் தங்கள் பணியினைத் தொடர்வதற்கு ஆதாரமாக சருவமானிய நிலங்களையும் சுரோத்திரிய கிராமங்களையும் மன்னர் வழங்கி உதவினார்.[3]


  1. Census the Town of Madras (1871), pp. 49-50.
  2. Rajaram Row, T, , Ramnad Manual (1891), p. 12
  3. Boards Misc. Register. (1812), pp. 332, 351.