பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

37


ஆலயங்களுக்கு அடுத்தபடியாக, இந்த மன்னர் இராமேஸ்வரத்திற்கு ஆண்டு முழுவதும் யாத்திரையாக வந்து கொண்டிருந்த பக்தகோடிகளின் வசதிக்கென அன்ன சத்திரங்களை பராமரித்துவரும் பணியில் மிகுதியான பொருளையும் செலவு செய்தார். வடக்கே தஞ்சை அரசின் தெற்கு எல்லையில் துவங்கி கிழக்கு கடற்கரை வழியே தொடரும் சேதுபாதையில் பல இடங்களில் முந்தைய சேதுமன்னர் பல அன்ன சத்திரங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். போக்குவரத்து வசதிகளும், அடுத்து அடுத்து ஊர்களும், அமையப்பெறாத நிலை அந்தக் காலத்திலும் இருந்ததால், இராமேஸ்வரம் வந்து செல்லும் பயணிகளுக்கு இந்த அன்ன சத்திரங்களில் தங்கும் வசதியும், உணவு வசதியும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. பயணிகளின் விருப்பப்படி அந்த அன்ன சாலைகளில் அவர்களுக்கு சமைத்த உணவாகவும், அல்லது சமையலுக்கான அரிசி, பருப்பு, காய்கறிகளாகவும் வழங்கப்பட்டன. சேது மன்னரது இந்தத் தர்மம் பெரும்பாலும் மூன்றுநாட்கள் வரை ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்பட்டது. கோடைகாலத்தில் வெம்மையைத் தணிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்கு நீரும் மோரும் வழங்கப்பட்டன[1] மேலும் ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரது உறுபசி நீக்கவும், இந்த அன்னச்சத்திரங்கள் புகலிடமாக விளங்கி வந்தன இந்த அறப்பணிகள் காலமெல்லாம் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற சேது மன்னர்கள் பல ஊர்களை இந்த அறப்பணிகளுக்கு ஆதாரமாக வழங்கியிருந்தனர். அந்த ஊர்களின் ஆண்டு வருவாய் முழுவதும் இத்தகைய தர்மங்களுக்கு செலவிடப்பட்டது. இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே தஞ்சைக்கும் தெற்கே கன்னியாகுமரிக்கும் செல்லும் கடற்கரைப் பகுதிகளிலும், மேற்கே மதுரைக்குமாகச் செல்லும் மூன்று வழிகளிலும் இத்தகைய சத்திரங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பாதைகளின் இடைவெளியை குறைத்து இன்னும் கூடுதலான அன்ன சத்திரங்களை மன்னர் முத்துராமலிங்கம் அமைத்தார். கோட்டைப்பட்டினம். முத்துராமலிங்கப் பட்டினம், தீர்த்தாண்டதானம், தேவிப்பட்டினம், ஆற்றங்கரை, தோணித்துறை, கடுகு சந்தை, நாகாச்சி, பால்


  1. Rajaram Row, T. Ramnad Manual (1891), pp. 98-94.