பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எஸ். எம். கமால்

அல்லது ஊர்களை தளபதிக்கு மன்னர் கொடுத்தல் வழக்கமாக இருந்து வந்தது. அத்துடன் தமது மருமகனை இராமநாதபுரம் சீமையின் எட்டு மாகாணங்களில் ஒன்றான வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராகவும் நியமனம் செய்தார்.[1]

ஆனால், இந்த சேதுபதி மன்னரது இறப்பிற்குப் பிறகு இராமநரதபுரத்தில் அரியாசனம் ஏறிய தண்டத் தேவரது ஆட்சியை தஞ்சை மன்னரது படை உதவியுடன் பவானி சங்கரத் தேவர் கைப்பற்றினார். இவர் இரகுநாதக் கிழவன் சேதுபதியின் இளவல் ஆவார். கைதியாகப் பிடிக்கப்பட்ட தண்டத் தேவர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் வெள்ளிக் குறிச்சியின் ஆளுநர் சசிவர்ணத் தேவரும் பதவி நீக்கம் பெற்றார். அவர் பக்கத்து நாடான தஞ்சைக்குச் சென்று பவானி சங்கர தேவரது அநீதியை தஞ்சை மன்னருக்கு எடுத்து உணர்த்தி அங்கேயே தங்கி விட்டார். அப்பொழுது இராமநாதபுரத்தி லிருந்து தண்டத் தேவரது சகோதரர் கட்டையத் தேவரும், உயிருக்குத் தப்பி தஞ்சை மன்னரிடம் ஓடிவந்து சேர்ந்தார்.[2]

இந்த இரண்டு இளவல்களது அவல நிலையை அறிந்த தஞ்சை மன்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அரசியல் தஞ்சம் வழங்கினார். நாளடைவில் அவர்கள் மீது கொண்ட பரிவுணர்வு காரணமாகவும், இராமனாதபுரம் சீமையில், பாம்பாற்றுக்கு வடக்கே உள்ள பகுதியை மீண்டும் தமது அரசு எல்லைக்குள் சேர்த்து விட வேண்டும் என்ற பேராசையாலும், அந்த மறவர் தலைவர்களுக்கு படை உதவ முன்வந்தார். ஏற்கனவே பவானி சங்கரத் தேவரும், இத்தகைய உடன்பாட்டின் அடிப்படையில்தான் ஏற்கெனவே தஞ்சை அரசரது படை உதவி பெற்று இராமனாதபுரத்தைப் பிடித்தார். ஆனால், அவர் தஞ்சை அரசருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி செயல்பட வில்லை. அதனால், பவானி சங்கர சேதுபதியையும், தஞ்சை மன்னர் பழிவாங்க முடிவு செய்தார். விரைவில் தஞ்சைப் படைகள் கட்டையத் தேவர் தலைமையில் மறவர் சீமையை நோக்கிப் புறப்பட்டன.


  1. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 239
  2. Ibid., p. 239