பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
எஸ். எம். கமால்
 

குஷ் தொகையையும் தாமே செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.[1]

இராமநாதபுரம் மன்னரது கோரிக்கை நவாப்பிற்கு நியாயமாகவே பட்டது. என்றாலும், நவாப்பின் இணக்கத்தை செயல்படுத்துவதற்கு கும்பெனியார் உடன்படவில்லை. மைசூர் மன்னர் ஆங்கிலேயருக்கு எதிராகவும், மருது சேர்வைக்காரர்களுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சிவகங்கை அரசியலில் தீவிரமான மாற்றம் எதனையும் புகுத்த விடாமல் கும்பெனியார் குறுக்கே நின்றனர். இருந்தாலும் தமது அடுத்த முயற்சியாக இராணி வேலு நாச்சியாரது மகள் வெள்ளச்சியை மணந்து கொள்ளுவதற்கு சேதுபதி மன்னர் முயற்சித்தார்.[2] ஏற்கெனவே திருமணமான அவர் இப்பொழுது ஏன் சிவகங்கை இளவரசியை மணந்துகொள்ள முன்வர வேண்டும் என்பதை மருது சேர்வைக்காரர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். இந்த முயற்சி மறவர் சீமையை ஒன்றுபடுத்தவும், தங்களுக்குள்ள செல்வாக்கை செல்லாத காசாக்கவும் செய்யும் மறைமுக சூழ்ச்சி என்பதை உணர்ந்தவர்களாக அந்த முயற்சியை அவர்கள் முறியடித்தனர். அத்துடன் அந்த இளவரசி, படமாத்துார் கெளரி வல்லபத் தேவர் என்ற அரச வழியினரை மணம் செய்ய விடாமலும் குழப்பம் செய்தனர். இதனை அறிந்த கும்பெனி யார், சிவகங்கைச் சேர்வைக்காரர்களை கடுமையாக எச்சரித்தனர்.[3]


சிவகங்கைப் பிரதானிகளது நடவடிக்கைகளால் சேதுபதி மன்னரது சினமும் சீற்றமும் பன்மடங்கு பெருகியது. சிவகங்கைப் பிரதானிகள் தமக்கு மட்டுமல்லாமல், தமது மறவர் சமூகத்திற்கே எதிரியாக வளர்ந்திருப்பது போன்ற பகை உணர்வு மன்னருக்கு. அவர்களை அழித்து தமது முன்னோருடைய சொத்தான சிவகங்கைச் சீமையை மீட்பதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இடைவிடாது மூழ்கியிருந்தார் அவர். இந்த நிலையில்


  1. Military Consultation, Vol. 158, 24-1-1792, p. 474
  2. Board of Revenue Proceedings, Vol. VIII 11.4-1785, p. 338
  3. Military Country Correspondence Vol. 45,28-5-1794, p. 153