பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எஸ். எம். கமால்


மறவர் சீமையின் மலர்ச்சிக்கு காரணமாக உள்ள வையை கிருதுமால் ஆறுகள், மேற்கிலிருந்து கிழக்காக சிவகங்கைச் சீமையில் நுழைந்து இராமனாதபுரம் சீமையைக் கடந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமம் பெறுகின்றன. வழியிலுள்ள நூற்றுக் கணக்கான கண்மாய்கள், அதே ஆற்று நீரினால் நிறைக்கப்பட்டு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப் பட்டன. இதனைத் தடுத்து இராமநாதபுரம் சீமையில், வறட்சியைத் தோற்றுவிக்கும் முயற்சியாக, அந்த ஆற்றுக் கால்களின் போக்கை அடைத்து வெள்ளத்தை, வேறு திக்குகளில் திருப்பிவிடும் முயற்சியில் சிவகங்கைப் பிரதானிகள் முனைந்தனர். மறவர் சீமையின் மன்னர் மீதுள்ள கோபம் காரணமாக, அந்தச் சீமையின் மக்களைப்பற்றி குறிப்பாக மன்னரது ஊழியத்திலுள்ள, ஆயிரக் கணக்கான தமது அகம்படியர் குலத்தவரது நல்வாழ்வு பற்றிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லாது போயிற்று. இத்தகைய நடவடிக்கை பற்றிய முதல் செய்தி மன்னருக்கு பள்ளிமடத்திலிருந்து 14-4-1793-ல் கிடைத்தது. சித்திரைப் புத்தாண்டு நாளின் புனித காரியங்களில் ஈடுபட்டிருந்த சேதுபதி மன்னர், செய்தி அறிந்ததும், கிளர்ந்து எழுந்தார்.

அடுத்தநாள் காலையில், இராமநாதபுரம் கோட்டை கொடி மேடையிலிருந்த முரசம் முழங்கியது. கோட்டைக்கு உள்ளும் புறமும் இருந்த நூற்றுக் கணக்கான மறவர்கள் வளரித் தண்டு, வாள், கேடயம், ஈட்டி, துப்பாக்கி, தாங்கியவர்களாக கோட்டை முகப்பில் அணிவகுத்து நின்றனர். காவிக் கொடி தாங்கிய குதிரை வீரர்கள் முன் செல்ல பணியாட்கள் பின் தொடர, மன்னர் முத்துராமலிங்கம் பள்ளிமடத்துக்குப் புறப்பட்டார்.[1] அங்கே குண்டாற்றின் குறுக்கே சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த தடைகளை நீக்கி வெள்ளப்போக்கிற்கு வசதி செய்துவிட்டு கோட்டைக்குத் திரும்பினார். அடுத்து, அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற வாத்துக்காலும், சிவகங்கையாரால் மூடப்பட்டது. அதனையும் மன்னர் செம்மைபெறும்படிச் செய்தார். தொடர்ந்து பல கண்மாய்களும் இத்தகைய அழிவு முயற்சியால் பாதிக்கப்பட்டன. இவை அனைத்


  1. Military Miscellaneous Book, Vol. 31, 20-4-1793, pp. 569-72