பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

61

சத்திரத்தில் எண்பதுக்கும் அதிகமான போர் வீரர்கள் இருந்தனர். அவர்களை விசாரித்த பொழுது திருவாங்கூர் மன்னரது பணியில் உள்ள அவர்கள், இராமநாதபுரம் மன்னரின் உதவிக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருநூறு பேர் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

'நெல்லைச் சீமைப் பாளையக்காரர்கள் அடிக்கடி ஏராளமான வீரர்களை இங்கு அனுப்பி ஒத்துழைப்புக் கொடுப்பது தெரிய வருகிறது. சிவகிரி பாளையக்காரரின் மைத்துனரை இங்கு சந்தித்தேன். என்னைக் கடந்து அவர் குதிரையில் செல்லும் பொழுது வணக்கம் கூறிச் சென்றார். அப்பொழுது அங்கு இன்னும் சில போர் வீரர்களும் இருந்தனர். அவர்கள் தங்களை எட்டையபுரத்து பாளையக்காரர்களது ஆட்கள் என்று தெரிவித்தனர். இவைகளிலிருந்து இங்கு நிலவும் பகைமைச் சூழ்நிலை பற்றிய நிலைமை புரிகிறது. அதனை உடனடியாக அழித்தொழிக்காவிட்டால், மீண்டும் எதிர்காலத்தில் அவைகள் பல வழிகளில் வளர்ச்சி பெறும் சூழ்நிலை ஏற்படும்....'

இதே கருத்தினையே அடுத்து கலெக்டராக வந்த பவுனியும் தமது மேலிடத்திற்குத் தெரிவித்தார்.[1] அவரது கருத்துப்படி இராமநாதபுரம் அரசரினால் எந்தச் சூழ்நிலையிலும் பன்னிரண்டாயிரம் வீரர்களை களத்திற்குக் கொண்டு வரும் தகுதி உள்ளது என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த மோதல்களைத் தொடர்ந்து ஆற்காட்டு நவாப்பும், கும்பெனியாரும் இரண்டு தரப்பினரையும் வன்முறையைத் தவிர்த்து அமைதி காத்துக்கொள்ளும்படியாக பல வேண்டுகோள்களை விடுத்தனர். சிவகங்கைச் சேர்வைக்காரர் மட்டும் தங்களது வீரர்களை சிவகங்கை எல்லைப்பகுதிக்குள் திருப்பி அழைத்துக் கொள்வதாக கும்பெனியாருக்கு உறுதி அளித்தனர். ஆனால், சேதுபதி மன்னரோ ஆற்காட்டு நவாப்பினது அறிவுரையையோ அல்லது கும்பெனியாரது ஆணையையோ ஒரு சிறிதும் மதித்துச் செயல்படவில்லை.[2] அந்த அளவிற்கு அவரது வெஞ்சினமும் வெறுப்பும், சிவகங்கைச் சேர்வைக்காரர் மீது நிலைத்திருந்தது. அத்துடன்


  1. Military Consultations, Vol. 189 A, 29-8-1794, p. 4067
  2. Military Country, Correspondence. VoI. IV. (1794), p. 198