பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

எஸ். எம். கமால்

நவாப்பையும் வெள்ளையரையும் மறவர் மண்ணிலிருந்து அகற்றுவதற்கான பிரதான இலட்சியத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு, அப்பொழுது சிவகங்கைப் பிரதானிகள் அவரது பிரதான எதிரிகளாகத் தோன்றினர். அவர்களை அழித்து ஒழிக்கும் முயற்சியில் தமக்கு உதவுமாறு புதுக்கோட்டைத் தொண்டமானையும் கேட்டுக் கொண்டார். ஆனால் தொண்டமான் சேதுபதி அரசருக்கு உதவும் மனம் இல்லாமல் வாளாக இருந்து விட்டார்[1].

இந்தவிதமான முயற்சியில் தீவிரமாக இராமநாதபுரம் மன்னர் ஈடுபட்டிருந்தார் என்றும் திருவாங்கூர் அரசரும் திருநெல்வேலி பாளையக்காரர்களும், மேல்நாட்டு கள்ளர்களும் சேதுபதி மன்னருக்கு பக்கபலமாக இருந்து உதவினர் என்பதையும் கும்பெனியாரது ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதிவசதி, பெரும் அளவில் சேதுபதி மன்னரிடம் இருந்தது. அத்துடன் இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் சேது அணையின் காவலர் என்ற முறையிலும், இந்த மன்னர்கள் இடத்தில் சேதுபதி மன்னருக்கு தார்மீகரீதியான மதிப்பும் செல்வாக்கும் இருந்தன என்பதை அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிவகங்கைச் சேர்வைக்கார்ர்களின் சீற்றத்தை அடக்க மன்னர் மேற்கொண்ட இந்த ஆவேசமான அவசர நடவடிக்கைகள், ஆற்காட்டு நவாப்பிடமும் கும்பெனியாரிடமும் வெறுப்பை வளர்த்து, மோதலை ஏற்படுத்தி தமது இலட்சியப்பாதைக்கு இடைஞ்சலாக அமையும் என அவர் எண்ணவில்லை, எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்த அந்நிகழ்ச்சிகள் மறவர் சீமையின் அரசியல் களத்தில் இராஜ தந்திர சூன்யம் உருவானதை தெளிவாகச் சுட்டிக் காட்டின.


  1. Military Country Correspondence, Vol. 185-B (1794) р. 2157.