பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
எஸ். எம். கமால்
 


இவைகளையெல்லாம் அறிந்த கும்பெனியாரது மேலிடம், சேதுபதி மன்னர்மீது கடும்சினம் கொண்டு சீறியது. கலெக்டரது சமன்களுக்கு மன்னர் ஆஜராக வேண்டும் என்றும், ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் தானிய பொதிகளுக்கு சுங்க விதிப்பிலிருந்து விலக்கு வழங்க வேண்டுமென்றும் கட்டளைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த முரண்பட்ட சூழ்நிலையை பயன்படுத்தி, ஆழ்ந்த சிந்தனையும் கவனமும் இல்லாமல் வெள்ளையருக்கு விட்டுக் கொடுத்த மறவர் சீமையை மீண்டும் பெறுவதற்கு நவாப் முயற்சி செய்தார். அதன் தொடர்பாக தமது நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ளும் முந்தைய பிரதானி முத்து இருளப்பபிள்ளையை இராமநாதபுரம் சீமை பேஷ்காரராக நியமித்து சேதுபதி மன்னரது கொடுமைகளைக் களைந்து விடலாம் என்ற யோசனையை நவாப் கும்பெனியாருக்குத் தெரிவித்தார்.[1] ஆனால் நவாப்பைவிட, இப்பொழுது மறவர் சீமையில் கும்பெனியார் மிகுந்த அக்கறையுடன் இருந்தனர். தக்க சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் அவர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆதலால், நவாப்பின் அனுமதியோ ஆலோசனையோ அவர்களுக்கு தேவைப்படவில்லை.

சேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடி மருந்து இருப்பு, போர் வீரர் எண்ணிக்கை பற்றிய முழு விபரங்களையும் மற்றும் மன்னரது நிலக்கொடை பெற்று, அனுபவித்து வரும் போர்ப் பயிற்சி பெற்ற நாலாயிரம் வீரர்கள் நாட்டுப்புறத்தில் பல கிராமங்களில் வசித்து வருவதையும் இன்னும் பலவித ஆயுதங்களை ஏந்தக்கூடிய ஆறாயிரம் மக்கள், மன்னரது அறிவிப்பு பெற்ற உடனே கோட்டையில் குழுமிவிடக் கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும் தமது அறிக்கையில் மார்ட்டின்ஸ் துலக்கி இருந்தார். என்றாலும் அங்கு அப்பொழுது வறட்சி பரவி இருந்ததால் வறட்சியின் கொடூரத்தையும் கும்பெனியாருக்கு தளபதி மார்ட்டின்ஸ் அனுப்பிய மடல் பிரதிபலித்தது.


  1. Military Country Correspondence, Vol. 45, 17-10-1794, p. 348-52. Military Consultations, Vol. 189, 14-10-1794, pp. 4180-267