பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலவர் திரு. இளஞ்செழியன்

இவர் 1938-ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தைச் சேர்ந்த பெருவளப்பூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார் பெயர் அருணாசலம்; அன்னையார் பெயர் வெள்ளையம்மாள்.

டால்மியாபுரம் உயர் நிலைப் பள்ளியில் கல்விபயின்று பள்ளி யிறுதிப் படிப்பை முடித்தார். பின்னர்க் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்ந்து பயின்று புலவரானார். பேச்சாற்றல், எழுத்தாற்றல், கவிதைபுனையும் ஆற்றல் ஆகியன ஒருங்கே கைவரப் பெற்ற இவர் தி. மு. கழகத்தின்பால் பற்றுக் கொண்டு அரசியல் பணியாற்றத் தொடங்கினார். தி. மு. கழக அரசியல் மேடைகளில் பேசுவதிலும் அரசியல், சமுதாயம் பற்றிக் கவிதைகளை எழுதுவதிலும் இவர் ஆர்வத்தோடு ஈடுபடலானார்.

தமது ஆற்றல்கட்கேற்ற பணி ஏடெழுதும் பணியே எனவும் அதுவும் தி. மு. கழகச் சார்புடைத்தாய் இருத்தலே சாலச் சிறந்த தெனவும் துணிந்த இவர் 1962 இல் - 'போர்க்குரல்' என்னும் தி. மு. க. கிழமை இதழ் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் தமது அறிவாற்றல்கட்கு ஆக்கம் தேடினார்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓரங்க நாடகப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொள்வதில் இவர்க்கு ஆர்வம் மிகுதி. கல்வி பயிலும் காலத்தில் இத்தகு போட்டிகளில் கலந்து கொண்டு இவர் முதற் பரிசுகளைப் பெற்றுள்ளார். இத்தகைய கவிஞர் தமிழகம் தந்த விடுதலை வீரர்கள் ஐவருள் வ. உ. சிதம்பரனார் அவர்களின் வரலாற்றினை ஈண்டுக் கவிதை வடிவில் தருகின்றார்.

—————