பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி

33

பஃறொடை வெண்பா

வெள்ளிக் கிழமை விரிகதிர் தங்கத்தை
அள்ளித் தெளிக்கும் அழகிய பொன்மாலை
தேனூறும் வாயால் தெவிட்டாமல் ஓர்நொடியில்
பாநூறு பாடுகின்ற பாரதியார் கோவிலுக்குச்
செல்லுவ துண்டாம்; திருவாயாற் பாட்டிசைத்தே
அள்ளுவ துண்டாம் அனைத்துயிரைக் கத்துகின்ற
காக்கை குருவி கடல்மலை தேனிலவு
நோக்கும் பொருள்களிலே தோழமை காண்பதுண்டாம்
பாட்டுச் சுவையைப் பருகுவது போலொருநாள்
கோட்டுக் களிற்றைக் கும்பிட்டுச் சென்றணைத்தார்
தெங்கங்காய் தந்து திரும்பினார் ஐயையோ
அங்கம்புண் ணாக அவரைப் புரட்டியதே!
தொட்டால் கவிதைச் சுவையூறும் நல்லுடம்பைப்
பட்டால் தமிழ்க்காதல் பற்றும் பளிங்குருவை
வானத்தை விட்டிற்கு வந்த வளர்மதியைக்
கட்டிப் பலாச்சுளையைக் காவியச் செங்கரும்பைக்
கண்ணை மணியைக் கற்கண்டைத் தேன்பாகைப்
புண்ணாகப் போட்டுப் புரட்டியதே; அவ்வுடம்பைக்
கட்டில் தனிலிட்டார் காலனைத் தம்காலால்
எட்டி மிதிக்க இவருக்கிங் காற்றலில்லை.
ஆவி பறந்ததம்மா! அன்பரசி செல்லம்மாள்
தாவி யணைத்த தளிருடல் சாய்ந்ததம்மா !
மார்பில் அணைத்த மகரயாழ் வீழ்ந்ததம்மா!
சிட்டுப் பறந்ததம்மா ! சிந்தனைக் கதிரோடிப்
பட்டுத் தெறித்த பகலவன் மாய்ந்ததம்மா !
போக்கடித்த முத்தா புதிதாக வாங்கிவா?

வி.-3