பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


நாட்டு விடுதலைக் குழைத்த வீரர்களின் வரலாறுகளை மக்களிடையே பரப்பி, அதன்மூலம் மேலும் பல ஆற்றல் மிக்கவர்கள் தோன்றுமாறு செய்தல் அறிவுடையோர் கடன். அவ்வகையில் நல்லறிஞர் பலர் எழுதிய விடுதலை வீரர்களின் வரலாறுகளை நம் கழகம் முன்னரே வெளியிட்டுள்ளது.

இத்தகைய வரலாறுகள் உரைநடையில் மட்டுமன்றி உணர்ச்சியூட்டத்தக்க கவிதைகளாகவும் அமையுமாயின் அவை மிக்க பயன் தருவனவாகும் என்பது எமது எண்ணம்.

அண்மையில் திருச்சி வானொலி நிலையத்தில் கட்டபொம்மன், மருது பாண்டியன், பாரதியார், வ. வே. சு. ஐயர், வ. உ. சிதம்பரனார் ஆகிய தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை வீரர் ஐவரின் வரலாறுகள் பற்றிய கவியரங்கம் நடைபெற்றது. தமிழகப் பொதுப்பணி அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியவர்கள் அக்கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிச் சிறப்புற நடத்தினார்.

முறையே கவிஞர்கள் விடுதலை வீரர்களின் வரலாறுகளைத் தமக்கேயுரித்தான மிடுக்கு நடையில் இனிய - எளிய தமிழில் கவிதை மாரி பொழிந்துள்ளனர். கவிஞர்களை அறிமுகப்படுத்து முறையிலும், வரலாறுகட்குத் தோற்றுவாய் செய்யு முறையிலும் கலைஞர் கருணாநிதியவர்கள் தமது தலைமை உரையைக் கவிதையாகவே பொழிந்துள்ளது அனைவரும் வியந்து பாராட்டத்தக்கது.

இத்தகு சீரிய கருத்தரங்கினை வானொலி மூலம் கேட்டு மகிழ்ந்த யாம் இதனைத் தொகுத்து நல்லதொரு நூல்வடிவாக்கின் இது நாட்டு மக்கட்குப் பெரிதும் பயன்படும் நூலாய் அமையும் எனக் கருதினோம்