பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

51

நடுக்கடலில் கலம் செலுத்திப் புகழ்படைத்த
நாடிதற்குப் புதியபுகழ் இதனால் சேர்த்தார்!
அடுக்கடுக்காய் நாட்டவர்கள் கூடிவந்து
ஆதரவைப் பெருக்கிட்டார்; ஆனால் தேளின்
கொடுக்கைப்போல் ஆனார்கள் நாட்டை ஆண்டோர்
குமுற லுற்றார், சினமடைந்தார், எதிர்க்க லானார்;
தடுக்கின்ற சூழ்ச்சிபல் செய்தார், எந்தத்
தடைகளுக்கும் சிதம்பரனார் அஞ்சவில்லை!

ஒப்பந்தக் கப்பல்களை, நமக்கிருந்த
உறவுகளை இல்லாமல் முறிக்க வந்தார்
இப்பாரைச் சூழ்ச்சியினால் ஆட்சி செய்தோர்!
ஏராளக் கொடுமைகளைச் செய்திட்டார்கள்!
முப்புறத்துக் கடல்களையும் அழைத்து வைத்து
முழங்கலுற்றார் சிதம்பரனார்; நாட்டு மக்கள்
கப்பல்களைச் சொந்தமாக வாங்குதற்குக்
காணிக்கை - நன்கொடைகள் கொடுத்திட்டார்கள்!

ஊணில்லை, உறக்கமில்லை, உடலில் நல்ல
உடுப்பில்லை எடுப்பில்லை, கடலிலோடும்
தோணியைப்போல் அங்குமிங்கும் துன்பப்பட்டுச்
சுதேசிக்கப்பல் தன்னையிங்கு நிலைக்க வைத்தார்;
ஆண்பிள்ளை தன்வீட்டில் சாக, அங்கே
ஆறாகத் துயர்வெள்ளம் பெருகி யோட
தூணானார் சிதம்பரனார் அசைய வில்லை
கப்பலதை வாங்கும்வரை ஓய வில்லை

சிதம்பரனார் கப்பலுடன் வந்தார் மக்கள்
சிந்தையினில் மகிழ்ச்சியினைத் தந்தார், எங்கும்
இதேபேச்சு, ஊரெல்லாம் கூடிக் கூடிச்
சிதம்பரனார் பெருமையினைப் பேசி னார்கள்!