பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

53

வேரோடு சாய்ப்பதற்குத் திட்டமிட்டார்;
விடுதலைக்குத் தூபமிட்டார் இந்த நாட்டின்
சீர்காக்க, சிறப்புதனைக் காக்க தன்னைச்
சீர்குலைத்துக் கொள்வதற்கே திட்டமிட்டார்

கூலியினை உயர்த்தாது, வேலை வாங்கிக்
கொடுமைசெயும். முதலாளிக் கூட்டம் தன்னை
வேலியிட்டு முழக்கங்கள் முழங்கி நெஞ்சில்
விசனத்தை உண்டாக்கிப் பணிய வைத்துக்
கூலியினை உயர்த்துதற்கும், விடுமுறைகள்
கொடுப்பதற்கும் வழிசெய்தார், தொழிலாளர்கள்
பால்வார்த்துத் தம்வாழ்வில் பலனைச் சேர்த்த
பகலவனை எழில்நிலவை வணங்கினார்கள்!

கோரலெனும் தூத்துக்குடி ஆலை தன்னில்
குறைகொண்ட தொழிலாளர் ஆர்ப்பரிக்கப்
போராட்டம் தொடங்கிற்று; நாட்டை ஆண்டோர்
புத்திகெட்டார்; முதலாளி பக்கம் சேர்ந்தார்;
சேர்ந்துவந்து சண்டையிட்டார், மக்க ளெல்லாம்
சினமடைந்து தொழிலாளர் பக்கம் சேர்ந்தார்!
நேர் நின்று சிதம்பரனார் எதிர்க்க இந்த
நிலைமாறிப் புதுநிலைமை பிறந்த தங்கே!

வெள்ளையர்கள் அந்நாளில் இரவில் தங்கள்
வீடுகளில் உறங்காமல் அஞ்சி யோடி
அல்லலுற்றார், துறைமுகத்தில் உறங்கி வந்தார்!
அச்சத்தால் பொழுதெல்லாம் செத்து வந்தார்!
எல்லையின்றிக் கொதிப்படைந்த மக்கள் தம்மை
எதிர்ப்பதற்கு வழியின்றிப் பணிந்திட் டார்கள்!
சொல்லிவந்த தொழிலாளர் குறையை, அன்றே
சுலபத்தில் தீர்த்து வைத்தார்; பிழைத்துக் கொண்டார்!