பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

விடுதலை வீரர்கள் ஐவர்

பொதுமக்கள் மதித்திருக்க, நாட்டிலுள்ள
புலவரெல்லாம் கவிஞரெல்லாம் போற்றிப் பாடப்
புதுக்கொம்பைச் சிதம்பரனார் பெற்றார் இந்தப்
புரட்சிமிகு வேளை தனில், மதுரை மண்ணில்
உதித்தவராம் சுப்பிரமணிய சிவா என்பாரை,
உதவா தார் தமையுமிங்குத் தனது பேச்சால்
கொதிக்க வைக்கும் சிங்கத்தைக் காணப்பெற்றுக்
கூட்டாக விடுதலைப்போர் புரிந்திட்டார்கள்!

வங்காள வரிவேங்கை, பொங்கி வந்த
வடகங்கை ‘விபினசந்திர பாலர்’ என்பார்
இங்காள வந்தோர்க்கு எதிரி! அன்னார்
இட்டதொரு கட்டளையை உதறலானார்!
அங்கதனால் சிறைப்பட்டார்; நாட்டு மக்கள்
அனைவருமே இதனாலே துக்கப்பட்டார்;
பொங்கியவர் வெளியில்வரும் நாளை, நாட்டில்
பொங்கல்விழா போல்நடத்தத் திட்ட மிட்டார்!

ஆறு திங்கள் பறந்தோட, சிறையின் வாசல்
அப்பாலே நகர்ந்தோட வெளியில் வந்தார்!
ஆறுஎன அருவியெனத் தெற்கு நாட்டு
ஆண்சிங்க மறவரெல்லாம் கூடி வந்தார்
ஊறு செய்தார் நாடாள்வோர், தெருவில் எந்த
ஊர்வலமும் கூட்டமதும் கூடாதென்றார்
ஏறுஎன களிறுஎன இருந்த வீரர்
இருவரையும் தனியழைத்துத் தடைகள் சொன்னார்?

நெல்லை நிலம் முழுவதுமே கூடி இந்த
நிலமதிரும் ஊர்வலத்தை நடத்த எங்கும்
எல்லையிலா உணர்ச்சியொன்றே கண்ட துண்டு!
எல்லோரும் வான்பிளக்க முழங்கிட் டார்கள்!