பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

55

சொல்லாலே உலகத்தை ஆளவந்த
சொல்வேந்தர் சிவாவும் சிதம்பரனார் தாமும்
பல்லா யிரவர்கூடி இருக்க, இந்தப்
பாரினையே உலுக்கவைத்துப் பேசி னார்கள்!

ஏதங்கே ஆதிக்கம்? யாது மங்கே
எடுபட்டுப் போயிற்று! ஆட்சிக் கப்பல்
பாதித்து, வருவாய்கள் ஏதுமின்றிப்
பதைபதைத்துக் கதறியது; நமது கப்பல்
பாதையிலே வேகமுடன் பொருளை ஏற்றிப்
பலமான வருவாயில் ஓடிற் ஹங்கே!
மேதினியை ஆண்டவர்கள் அதிகாசத்தை
மேல் செலுத்தத் திட்டமிட்டார் முடிவுசெய்தார்?

இதுவரைக்கும் விட்டுவைத்தார், இதற்குப் பின்னும்
இனிமேலும் விட்டுவைக்க அவர்கள் என்ன
சதியறியாப் பிறவிகளா? இருவ ரையும்
சந்திக்க வரச்சொல்லி ஆணை யிட்டார்!
சதிதெரிந்தும் விதியதனைப் புரிந்து கொண்டும்
சிதம்பரனார் சிவாவுடனே நெல்லை சென்று
அதிகார மனைக்குள்ளே நுழைந்திட்டார்கள்!
அலறலுடன் வெளிவந்தான் ‘விஞ்சு’ என்பான்!

இசைடொழிந்து, மலர் பொழிந்து, அன்பு என்னும்
ஈடற்ற மழைபொழிந்தார் மக்கள்; ஆனால்
வசைபொழிந்தான்; நாய்பேய்கள் என்று சொல்லி
வாய்சலித்தான்; எம்மிடத்தில் ஒப்ப மின்றி
விசையுடனே நீவிரிங்குக் கூட்டம் தன்னில்
வெறுப்புரையை, மறுப்புரையை எங்கள் மீது
தசைச்சோர்வு இன்றிநித்தம் சலித்தி டாமல்
தாக்கியிங்குப் பேசியது ஏனே? என்றான்!