பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

விடுதலை வீரர்கள் ஐவர்


மடமைகொண்ட மக்களினை உங்கள் பேச்சால்
மடக்கியதும் மாற்றியதும் முறையா என்றான்;
அடிமைகொண்ட எம்மை நீ அசைக்க எண்ணல்
ஆகின்ற காரியமா? என்று கேட்டான்!
உடைமைக்கோர் கப்பல்வைத்து, அதனை யிங்கு
ஒட்டியதும் குற்றமென்றான்; இனிமேல் நீங்கள்
தொடரலுற்றால் காரியத்தை, தொலைப்பேன் என்றான்;
தொடர்ந்தாரும் எதிர்த்திட்டால் சுடுவேன்” என்றான்!

பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசலானார்
பெருமையுள்ள சிதம்பரனார்; அஞ்ச வில்லை!
“மூச்சடங்கி விடுமெனினும் கவலை இல்லை.
முழு இருட்டில் என் நாட்டைத் தள்ள மாட்டேன்;
ஏச்சுதனை நீசொரிய, அஞ்சு கின்ற
இழிபிறவி அல்லடா நான்! எனக்கு இங்குப்
பேச்சுரிமை தரவந்தோன் நீயா? என்றன்
பிறப்புரிமை தனைப்பறிக்க நீயார்? என்றார்;

என்வுளத்தை என் நாட்டில் நான் பெருக்க
எதற்காக நீகோபம் கொள்ளு கின்றாய்?
உன்நலத்தை நீபெருக்க இங்கு வந்த
உரிமையினைச் சொல்வாயா? எதற்கு வீணாய்
என்னென்ன வோபேசு கின்றாய்? உன்னை
எள்ளளவும் நான்மதிக்க வில்லை!” என்றார்!
கண்சிவந்து, வாய் துடித்து அந்த வெள்ளைக்
காரனங்கே பெருஞ்சத்தம் போட லானான்!

பொறிபறந்த கண்களொடும் நெஞ்சம் தன்னில்
புகைந்தெரியும் நெருப்போடும் அவன்குலைத்தான்!
குறிக்கோளின் நெஞ்சங்கள் கொஞ்சங் கூட
கோழைமையால் மனந்தளர வில்லை! பின்னர்