பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பாதையிலே 11 வாழ்ந்தவர்கள் என்பதைவிட இருவரும் ஒரே வர்க்கத்தில் பிறந்தவர்கள் என்பதே பொருத்தமானது இந்த வர்க்க ஒற்றுமை இராஜாபாதருக்குப் புரிந்ததோ என்னவோ கோவிந்தனுக்குப் புரிந்திருக்கும் அதிலும் எதையும் வெள்ளையாகப் பேசும் இராஜாபாதரைப் பிடித்திருக்கும். தமிழரசு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்த கோவிந்தன், அச்சுக் கோர்ப்பது போல் புதிய புதிய எண்ணங்களையும் கோர்த்துத் தமிழோடும் தமிழ் அறிஞர்களோடும் பழகும் வாய்ப்பைப் பெற்றார். அக் காலத்தில் 'தமிழரசு' இதழின் ஆஸ்தானக் கவிஞராக இருந்து வந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுச்சி மிகுந்த கவிதைகள் எழுதினார் அவற்றில் 'தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் சிறப்பான கவிதையை முதன் முதலில் அச்சுக்கோர்த்த பெருமை பிற்காலத்தில் கவிஞராக, எழுத்தாளராக மலர்ந்த விந்தனுக்கே உரியது. அச்சுத் தொழிலாளி கோவிந்தனுக்கே உரியது. அந் நாளில் அச்சகத்தில் பணிபுரிந்த பலர் பிற்காலத்தில் பல துறைகளில் சிறந்தவர்களாகப புகழ் பெற்றவர்கள். எதிர்காலத்தில் எழுத்தாளராக மலர்வோம் என்று எப்படி விந்தனுக்குத் தெரியாதோ அதேபோல் முன்னாள் அமைச்சர் என்.வி. நடராசன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நாட்டியக்கலைஞர் நடராஜ் - (சகுந்தலா) ஆகியோருக்கும் தெரியாது. நாட்டியக் கலைஞர் நடராஜ் 'தமிழரசு அச்சகத்தில் டிரெடில்மேனாக இருந்தவர். அச்சுப் பட்டறை பல அறிஞர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், அவர்களில் ரொம்பவும் மாறுபட்டவர் கோவிந்தன் ஆம், ஜீவிப்பதற்கு அச்சுத் தொழிலைப் பயின்றவர், தாம் அச்சுக் கோர்த்த எழுத்துகளில் வனப்பும் வளமையும் மிகுதியாக இருப்பதால் தமிழ் மொழியின் மேல் பற்றுக்கொண்டு வனப்பும் வளமும் மிகுந்த தமிழில் வாழ்க்கையின் யதார்த்த உணர்வுகள் வெளிப்படாதால் பெரு மூச்சும் பெருத்த ஏமாற்றமும் அடைந்தார் இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர் சமூகத்தை நேருக்கு நேர் காணத் துடித்தார். அதற்கு அவருடைய சுயவாழ்க்கையே ஆதாரமாக இருந்தது அச்சுத்தொழில் இன்று நவீன வசதிகளுடன் கூடிய முற்போக்குத் தொழிலாக வெளி உலகத்துக்குக் காட்சியளித்தாலும் இவ் வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் வாழ்க்கை பின்னடைந்த பிற்போக்குத்தனமான நலிந்த வாழ்க்கை என்பதை இன்றும் கண்கூடாகக் காணலாம்