பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள்

71

டாக்டர் நெடுமாறனார் வருகையை நறுமணத்தின் அண்ணன் ஒருவாறு புரிந்து கொண்டபோதிலும், “என்ன இருந்தாலும் ஆண் ஆண்தான்" என்று அவள் பாட்டி எச்சரிக்கத் தவறவில்லை

யார் எப்படி எச்சரித்த போதிலும், எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்து விடுகிறது! நடப்பதற்கு முன் சிரித்தவள் நடந்த பின் அழுகிறாள் அவளின் அழுகையைக் கண்டு 'அழாதே! இதெல்லாம் இயற்கையின் நியதி! என்று தமிழப் பேராசிரியர் - 'அன்னைக்கு' 'தங்கைக்கு' என நூல் எழுதிய நூலாசிரியர் டாக்டர் நெடுமாறனார் அமைதியாக ஆறுதல் கூறி அவசர வேலை இருப்பதாகச் சொல்லிப் போகிறார்; அத்துடன் போயே விடுகிறார்.

திறனாய்வு

"இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை, வாழ்க்கையி லிருந்துதான் பிறக்கிறது!"

"கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனை யிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டும் - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது"

இதுதான் விந்தனின் இலக்கிய நோக்கு. இந்த நோக்கு அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது

மேலும் 'வாழ்க்கை ' என்னும் பேரால் நடந்து முடிந்த கதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு இல்லாத ‘பண்பு'கள் எல்லாம் இருப்பதாகச் சொல்லி யாரையும் ஏமாற்றுவதில்லை; தன்னையும் ஏமாற்றிக் கொள்வதில்லை. மாறாக நடந்து கொண்டிருக்கின்ற கதைகளை - வாழ்க்கையை எடுத்துக் கொண்டு அதில் காணப்படும் பண்பு குறைவான - அதிலும் 'தமிழ்ப்பண்பு' குறைவான செயல்களைக் கொஞ்சம் அஞ்சாமல் எடுத்துச் சொல்லிப் பலரின் தூற்றதலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்ட போதிலும், விந்தன் தன் பண்பை, பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கு மிகுந்த சான்றாக உள்ளது 'மனிதன் மாறவில்லை ' நாவல்!

பெரும்பாலும் விந்தன் படைக்கும் கதை மாந்தர்கள் நம்முடன் வாழ்பவர்களாகவும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களாகவும் இருப்பதால் அவர்களைப் பட்டென்று வாசகர்கள் அடையாளம் கண்டு, அவர்கள் பேரில் அனுதாபம் கொள்ள வேண்டியிருந்தால் அனுதாபம் கொள்கிறார்கள்; ஆத்திரப்பட வேண்டியிருந்தால் ஆத்திரப் படுகிறார்கள் இதன் மூலம் விந்தனின் கதை மாந்தர்கள் எந்த அளவிற்கு வாசகனைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள் என்று அறியலாம்