பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 115 விந்தன் எழுதிய ஆறு நாவல்களுள் பாலும்பாவையும் மட்டும் தனித்த சிறப்புடையதாய் விளங்குகிறது. இதனை ஒரு குறுநாவல் அல்லது நீண்ட சிறுகதை என்றும் கூட கூறலாம். எழுத்துச் செல்வர் வல்லிக் கண்ணன் அந்நாவலைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார் : பார்க்கப் போனால், பாலும் பாவையும் நாவலில் சொல்லப்பட்டுள்ள கதை சாதாரணமான, பழைய விஷயம்தான். காதல் என்று மயங்கி ஒரு பெண் தன்னலக்காரன் ஒருவனுடன் ஓடிப் போகிறாள். அவள் தன்னுடைய நகைகளை எடுத்து வருவாள் என எதிர்பார்த்த காதலன், நகைகள் அணியாது வந்த காதலியை ஓர் ஊரின் ஓட்டல் அறையில் விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். கைவிடப்பட்ட அபலைப் பெண் தனது எதிர்கால வாழ்க்கைக்காக எந்த ஆணையும் காதலிக்கத் தயாராகி, அடுத்த அறைக்கு வந்து சேர்ந்த ஒரு ஏழைப் புத்தக விற்பனையாளனோடு காதல் வளர்க்கத் துணிகிறாள். அவளிடம் அனுதாபம் கொள்ளும் அந்த இளைஞன், தன்னைக் காத்துக் கொண்டு, அவளுக்கு உதவிபுரிய விரும்புகிறான். இம்முயற்சியில், அவன் அவனது பெற்றோரால் பழிவாங்கப்படுகிறான். அவளைக் கைவிட்ட பணக்காரக்காதலன் வேறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான் அவள், முதன் முதலில் அவளிடம் ஆசை கொண்ட இளைஞன் தனக்குப் பாதுகாப்பு அளிப்பான் என்று எதிர்பார்க்கிறாள். ஆனால், அவனோ கெட்டுப்போன பாலும், கெட்டுப் போன பாவையும் விலக்கி ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள்தான் என்று ஞானம் பெற்று, அவளை வெளியே தள்ளுகிறான். அவள் கடலில் இறங்கி தற்கெலை செய்து கொள்கிறாள். 'இந்தக் கதையை விந்தன் வளர்த்திருக்கிற விதம் புதுமையானது. கதை மாந்தரை அறிமுகப்படுத்துகிற வகை புதுமையானது. அவர்களைப் பழகவிட்டு, உரையாட வைக்கிற போக்கு ரசமானது, சுவையானது. இடை இடையே அவர் சுட்டிக் காட்டுகிற உண்மைகள் சிந்தனைக்கு உணவு. அங்கங்கே அவர் பொறித்துள்ள சிந்தனை மணிகள், அறிவின் - அனுபவத்தின் ஒளிச் சுடர்கள்.” (விந்தனும் விமர்சனமும் பக். 46, 47)