பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் சிறுகதைகளில் பெண்கள் - மங்கையர்க்கரசி மயில்வாகனன் முன்னுரை இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களுள் சிறிய வடிவாலும், சீரிய அமைப்பாலும் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றுவிட்ட கலைவடிவம் சிறுகதை ஆகும். சிறுகதை எழுதுகின்ற எழுத்தாளர்கள் எண்ணற்றவர்கள் இருப்பினும், நம் எண்ணத்தில் நிலைத்து நிற்பவர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் ஒருவர், உண்மை ஒளி வீசும் சிறுகதைகளைப் படைத்த வி. கோவிந்தன் என்ற விந்தன் ஆவார். விந்தன் உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். எனவே, ஏழை எளியவர் வாழ்க்கையிலுள்ள மன மகிழ்ச்சியினை, துயர உணர்வுகளை எளிய தமிழ் நடையில் சித்திரிக்க அவரால் முடிந்தது. அவர் கதைகளில் ஏழைக் குடியானவன், ஆலைத் தொழிலாளி, ரிக்ஷா வண்டிக்காரன், சுமை கூலிக்காரன் ஆகியோரின் சுகதுக்கங்கள் கலைநயத்துடன் கூறப்பட்டிருக்கும். தொழிலாளிகளையும், பாட்டாளிகளையும் சுரண்டி வாழ்கின்ற பனக்கார வர்க்கத்தின் அநீதியும் கொடுமையும் குறிப்பிடப்பட்டிருக்கும். வறுமையை அடித்தளமாக்கி வாழ்க்கையோடு போராடும் பெண்களின் அவல நிலை எடுத்துரைக்கப்பட்டிருக்கும்.