பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 7 “வில்லே ருழவர் பகைகொளினும், கொள்ளற்க சொல்லே ருழவர் பகை!” என்று அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரை அரசனுக்குக் கூறப்பட்டது என்று விட்டுவிடக் கூடாது. அரசன் என்று ஒருவன் இல்லாத குடியரசு முறைக்கும் இந்த அறிவுரை பொருந்தும். சமூகம் என்ற அமைப்புக்கும் இந்த அறிவுரை பொருத்தமுடையதே. கவிதையாலும் கதையாலும் கலைத் தொண்டு செய்யும் சொல்லாளரின் - எழுத்தாளரின் பகையைக் கொண்ட அரசன் அழிவது போலவே, அவர்களின் பகையைத் தேடிக் கொண்ட சமூக அமைப்பும் அழியும். இன்றுள்ள சமூக அமைப்பு நீடிக்காது, விரைவில் மாறிவிடும் என்பவதற்குச் சோதிடம் கேட்க வேண்டியதில்லை; சொல்லேருழவராகிய இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் கவிதைகளையும் கதைகளையும் படித்தால் போதும்; "திருவள்ளுவரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்தாத சமூக அமைப்பே நீ நிலைகுலைந்து அழியப்போகிறாயே!” என்று இரக்கம் பிறக்கிறது. 'விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக் காட்டி, பேசாமல் கதை சொல்லுகிறார். அவர் படைக்கும் பாத்திரங்களும் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின் மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதே இல்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது. நாயோடு போட்டி போட்டுப் பிழைக்கும் சோலையப்பன், மாம்பழம் விற்று வயிறு வளர்க்கும் அம்மாயி, விளக்கெண்ணெய் வியாபாரம் செய்யாத நாடார் கடை மாணிக்கம் பிள்ளை - இவர்களுடைய மனங்கள் எல்லாம் அமைதியான மனங்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாக மாறுகின்றன. சில இடங்களில் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சமூகக் கேட்டுக்குக் காரணமானவர்களை வம்புக்கு இழுப்பதைப் பாருங்கள்!