பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் கோபக்காரக் கலைஞன் - ஆர். வி. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா? இருக்கிறது என்று சொன்னால் அந்தக் கதைகள் இப்போது படித்தாலும் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் படிப்பவரின் மனத்தில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும் இருந்தாக வேண்டும். அந்த அளவுப்படி விந்தன் எழுதிய சிறுகதைகள் இன்னும் துடிப்போடு உயிர் வாழ்கின்றது என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிவிடலாம். ஆமாம், கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக் காலமாக எழுத்தாளர் விந்தன் எழுதிய கதைகள் உயிரோடுதான் இருக்கின்றன; ஆனால் அந்தக் கதைகளைப் படைத்த விந்தன் தான் இன்று நம்மிடையே இல்லை. அவர் இல்லாத குறையை இந்தக் கதைகளிடையே அவர் வாழ்வதை அறிந்து ஆறுதல் பெறலாம். இன்று அவருடைய சிறுகதைகளை மீண்டும் படிக்கும்போது தலைமுறை இடைவெளி, ரசிகர்களின் மனவளர்ச்சி, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணமாக அங்கங்கெ சில குறைகள் நமக்குத் தோன்றலாம். மொழி வளம், நடை, உத்தி, கருப்பொருள், ஆட்சி இவற்றில் எல்லாம் நாம் இன்று வெகுதூரம் மாறுபட்டும் வேறுபட்டும் வந்திருக்கிறோம். இன்றுள்ள வாழக்கை நிலை அதற்குக் காரணம்.