பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(i) விந்தனின் சிறுகதைகள் - சிட்டி & சிவபாதசுந்தரம் கல்கி பத்திரிகையில் சாதாரண தொழிலாளியாகச் சேர்ந்து, பின்னர் எழுத்தாளராக மலர்ந்த விந்தன், அதிலிருந்து விலகிச் சொந்தமாக மனிதன் என்ற பெயரில் ஒரு இதழை நடத்த முன்வந்தது, அவருடைய துணிச்சலையும் இலக்கியக் கொள்கையையும் பிரதிபலித்தது. ஏற்கெனவே தம்முடைய எழுத்துகளால் தாம் ஒரு தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றும், முதலாளித்துவத்தை வெறுப்பவர் என்றும், மனிதாபிமானத்துக்காக உழைக்க வேண்டிய கடமை உண்டென்றும் காண்பித்துக் கொண்டதால், விந்தனுடைய பத்திரிகைக்கு முற்போக்குக் கொள்கையை ஆதரிக்கும் சில எழுத்தாளர்களின் ஆதரவும் படைப்புகளும் கிடைத்தன. இலக்கிய ரீதியில் சிறுகதையின் வடிவத்தைப் பல்வேறு உத்திகளுடன் கையாண்டு சமுதாய உணர்வுடன் மேற்கொள்ளும் பணி, மனிதன் பத்திரிகையில்தான் ஆரம்பமாயிற்று என்று சொல்லலாம். மனிதனின் மனசாட்சி உறுத்தி, சமுதாயத் தீமைகளைக் களைய அவன் வெகுண்டு எழுவதற்காகச் சிறுகதையைத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் பழக்கத்தை முதலில் தோற்றுவித்தவர் விந்தன் என்று சொல்லலாம். கோபமுற்ற இளைஞன் என்ற சமுதாய விளைவைத் தமிழ் இலக்கியத்தில் தோன்றச் செய்யும் அளவுக்குத் தம்முடைய கதைகளில் அவர் ஒரு ஆவேசத்தைத் தோற்றுவித்தார்.