பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

விந்தன் கதைகள்

சுப்பனும் குப்பியும் மட்டும் ரவியின் வீட்டில் வேலை பார்க்கவில்லை; அவர்களுடைய ஏக புத்திரனான தொப்பையும் அங்கே வேலை பார்த்து வந்தான். தினசரி எஜமான் வீட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவது அவனுடைய வேலை. இவர்கள் மூவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதே கிடையாது. ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் விதிதான் அப்படி யிருக்கிறதே! ‘அன்று எழுதியவன் அழித்து எழுதப் போகிறானா!’ என்று அபத்தமான நம்பிக்கையிலே, அவர்களுடைய அறிவு அவ்வளவு தூரம் மங்கிக் கிடந்தது.

அன்று மாலை வழக்கம் போல் மாடுகளை ஒட்டிக் கொண்டு எஜமான் வீட்டுக்கு வந்தான் தொப்பை. அதற்கு முன் எத்தனையோ முறை ரவி அவனைப் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவன் கண்ணுக்குத் தொப்பை வெறும் ‘மாட்டுக்காரப் பையனா’கவே தோன்றி வந்தான். அன்று என்னமோ தெரியவில்லை. அவனும் ‘மனிதனா’கத் தோன்ற ஆரம்பித்து விட்டான் ரவிக்கு!

தொப்பையப்பனின் சாம்பல் பூத்த கருத்த மேனியும், அழுக்குப் படிந்த பரட்டைத் தலையும், அரையில் அணிந்திருந்த கெளபினமும் அத்தனை நாட்களாக ரவியின் அகக் கண்களுக்குத் தெரியவில்லை; அன்று தெரிந்தது!

அவன் உண்பதுண்டா? உடுப்பதுண்டா? படிப்பதுண்டா? இந்தக் கேள்விகளெல்லாம் ரவியின் உள்ளத்தில் அத்தனை நாட்களாக எழவில்லை; அன்று எழுந்தது!

அவன் ஏன் அந்த நிலையில் இருக்கிறான்? அதற்கும் காரணம் விதியா?

விதி! விதி! விதி! இவர்களுடைய விதியை மாற்றவே முடியாதா? சிறிது நேரம் உதட்டின் மேல் விரலை வைத்த வண்ணம் வீட்டுக் கூரையை நோக்கி யோசித்தான் ரவி.

அவ்வளவுதான், ஓ, மாற்றலாம் போலிருக்கிறதே! - இல்லாதவனுக்கு விதி; இருப்பவனுக்கு அதிர்ஷ்டம் - இவ்வளவுதானே?

ஒரு கணம் ஒன்று, இரண்டு, மூன்று என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டே போனான் ரவி. எத்தனைவரை எண்ணினானோ என்னமோ கடைசியில் “ஆமாம்; அப்படித்தான் செய்யவேண்டும்” என்று தனக்குத் தானே அவன் தீர்மானித்துக் கொண்டான்”