பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாத்தனார்

103

வஞ்சி எப்பொழுதுமே இப்படித்தான். அவள் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைப் பற்றித் தன் கணவனிடம் ஒன்றுமே சொல்ல மாட்டாள்.

“அக்கா! நீதான் அந்த மாவைக் கொஞ்சம் அரைச்சுக் கொடுக்கக் கூடாதா?” என்றான் கந்தசாமி.

“அரைப்பேண்டா, அரைப்பேன்! ஏன் அவளைக் கூடக் கொஞ்சம் தூக்கி உன் பக்கத்திலே உட்கார வைக்கட்டுமா?” என்றாள் கங்கம்மா.

கந்தசாமி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவன் மனத்தை மாற்றுவதற்காக “வெய்யில்லே அலைஞ்சிட்டு வந்தாயே, கொஞ்சம் தயிரைப் போட்டுக் கூழைக் கரைச்சுக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் வஞ்சி.

“எடுத்துக்கிட்டு வா!” என்றான் கந்தசாமி.

உள்ளே போய்ப் பார்த்தால் தயிரைக் காணோம். அதைக் கபாலி காலி செய்துவிட்டிருந்தான். 'கேட்டால் பூனையின் மேல் பழியைப் போடுவார்கள். கேட்காமல் இருப்பதே நல்லது' என்று தீர்மானித்து, வெறும் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் வஞ்சி.

“என்னா வஞ்சி! தயிரு இல்லையா?”

“இருந்தது; இப்போது பார்த்தாக் காணோம். பூனை குடிச்சிட்டாப் போல இருக்குது” என்று தன் நாத்தனார் சொல்லப் போவதைத் தானே சொல்லி வைத்தாள் வஞ்சி.

அப்பொழுது “இல்லை, மாமா! நான்தான் குடிச்சுட்டேன்!” என்று சமர்த்தாகச் சொல்லிக் கொண்டே வந்தான் கபாலி.

“அட, என் கண்ணு! குடிச்சிட்டியா? - போ!” என்று தன் வயிற்றெரிச்சலை வெகு லாவகமாக வெளியிட்டான் கந்தசாமி.

* * *

“சேர்ந்து வாழ்வது தான் சிறந்தது என்கிறோம். ஆனால், வாழ்க்கையில் பார்க்கப்போனால் அதைப் போன்ற தொல்லை வேறு ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. நமது சுற்றத்தாருடன் நாம் பிரிந்து வாழும்போதோ, அல்லது பிரிந்து செல்லும்போதோ இருக்கிற ஆசையும் அன்பும் சேர்ந்து வாழும்போதோ, அல்லது சேர வரும் போதோ எங்கே இருக்கிறது?