பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

விந்தன் கதைகள்

அன்று வஞ்சியைப் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல அவளுடைய அம்மா வந்திருந்தாள். அப்பொழுது “நீங்க என்னாத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்க? இங்கேயேதான் இருக்கட்டுமே; எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் கங்கம்மா. அவள் போய்விட்டால் வீட்டு வேலைக்கும் சண்டைக்கும் ஆள் கிடைக்காதே என்ற கவலை அவளுக்கு!

இது தெரியாத வஞ்சி, “ஆமாம், அம்மா எனக்குக் கூட அவரை விட்டுவிட்டு வரத்துக்கு என்னமோ மாதிரியாயிருக்குது இங்கேயேதான் இருக்கிறேனே, எல்லாம் இந்த அம்மா பார்த்துக்கிறாங்க!” என்றாள்.

“என்ன இருந்தாலும் நாலுபேர் நாலு சொல்லுவாங்க!” என்று சொல்லி வஞ்சியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் அவளுடைய அம்மா.

அவள் வாழ்க!

* * *

ஞ்சி பிரசவித்து மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. கந்தசாமி தன் மனைவியை அழைத்துப்போக வந்தான். அவனுடன் செல்ல வஞ்சிக்கு எவ்வளவோ ஆசை. ஆனால் கங்கம்மாவை நினைத்தபோது, அங்கே சென்று அவளுடைய வம்புக்கு ஆளாவதைக் காட்டிலும் இங்கேயே இன்னும் இரண்டு மாதங்களாவது தொல்லையில்லாமல் இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று. இதைக் குறிப்பாகக் கந்தசாமியின் காதிலும் போட்டு வைத்தாள். அவனுக்கும் அவள் சொல்வது ஒரு விதத்தில் நல்லதென்றே பட்டது.

மறுநாள் கந்தசாமி தான் மட்டும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இதுதான்;

சிரஞ்சீவி கந்தசாமிக்கு, ஆசீர்வாதம்.

சண்டைக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார். நேரே பட்டணத்திற்கு வந்த அவர், அங்கே தனக்கு வேலை பார்த்துக் கொண்டு, இங்கே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். இந்தக் கடிதம் கண்டவுடன் நீங்கள் உடனே வந்து எங்களை அனுப்பி வைக்கவும்.