பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
மு. வரதராசன்

‘பொழுது’ என்ற ஒன்று இருப்பதை என்றைக்கு மனிதன் தெரிந்து கொண்டானோ, அன்றைக்கே பொழுது போக்கும் வழிகளையும் தெரிந்து கொண்டான். கலை என்று சொல்லப் படுகின்றவையெல்லாம் முதலில் பொழுது போக்குக்காகத் தோன்றியவைகளே. கலைகளில் சிறந்த கதையும் இப்படித் தோன்றியதே. கதை சொல்லிக் குழந்தையைத் தூங்கவைக்கும் தாயார், கதை சொல்லிக் குழந்தையின் மனத்தைத் திருத்தி வாழ்க்கையைப் பண்படுத்தவும் முயல்வதுபோல், பொழுது போக்குக்காகத் தோன்றிய கலைகளையே வாழ்க்கைப் பண்பாட்டுக்காகவும் சான்றோர் கையாளத் தொடங்கினார்கள். அது முதற்கொண்டே, புற்றீசல் போல் பொழுது போக்குக்காகத் தோன்றிய கலைகள், விண்மீன்கள் போல் அழியாத வாழ்வு பெறலாயின. கல்லிலும் சொல்லிலும் பிறவற்றிலும் நிலைத்து நின்று தலைமுறை தலைமுறையாக நூற்றாண்டு நூற்றாண்டாக வாழ்வு பெற்றன.

சொல் வடிவாக வாழும் கலைகளுக்குத் தனிப்பட்ட பெரிய ஆற்றல் உண்டு. வாழ்வுக்காகக் கொண்ட வில்லையும், வாழ்க்கைப் பண்பாட்டுக்காகக் கொண்ட சொல்லையும் ஒப்பிட்டுத் திருவள்ளுவர் ஒரு சிறந்த உண்மையை உணர்த்துகிறார். வில்லைக் கருவியாகக் கொண்டவர்கள் பகையானாலும் கவலை இல்லை; சொல்லைக் கருவியாகக் கொண்டவர்களின் பகை பொல்லாதது என்கிறார்.


          “வில்லேருழவர் பகைகொளினும், கொள்ளற்க
          சொல்லே ருழவர் பகை.”

என்று அறிவுரை கூறுகிறார். இந்த அறிவுரை அரசனுக்குக் கூறப்பட்டது என்று விட்டுவிடக் கூடாது. அரசன் என்று ஒருவன் இல்லாத குடியரசு முறைக்கும் இந்த அறிவுரை பொருந்தும். சமூகம் என்ற அமைப்புக்கும் இந்த அறிவுரை பொருத்தமுடையதே. கவிதையாலும் கதையாலும் கலைத்தொண்டு செய்யும் சொல்லாளரின் - எழுத்தாளரின் - பகையைக் கொண்ட அரசன் அழிவது போலவே, அவர்களின் பகையைத் தேடிக் கொண்ட சமூக அமைப்பும் அழியும். இன்றுள்ள சமூக அமைப்பு நீடிக்காது, விரைவில் மாறிவிடும் என்பதற்குச் சோதிடம் கேட்க வேண்டியதில்லை;